Wednesday, April 22, 2009

தஜ்ஜாலிடமிருந்து வந்த பின்னூட்டம்!?!

இதயத்தில் (மட்டும்) நிரந்தர இடம் என்ற பதிவில் தஜ்ஜால் என்ற பெயரில் வந்திருந்த பின்னூட்டத்திற்கான பதில்! கேள்விகள் சுவாரஸ்யமாக இருப்பதால் தனிப்பதிவாக இங்கிடுகிறேன்.

இறைவன் சர்வசக்திபடைந்தவன் என்றால் அவனால் தூக்கமுடியாத ஓர் கல்லைப் படைக்க முடியுமா? என்ற கேள்வியைப் போன்ற கேள்விகள்! அறிந்து கொள்ளும் ஆவலில் கேட்கப்பட்டிருப்பதால் அவை புறந்தள்ளப் படக்கூடிய கேள்விகளல்ல!! விரிவான அக்கேள்விகளிலிருந்து அடியேன் கிரகித்தவை யாதெனில்,

மனிதப் படைப்பைப் பற்றிய இறைவனின் முடிவு, மலக்குகளின் கணிப்பு அல்லது இப்லீஸின் மோசடி என்பவைகளின் முலம் செய்திகள் ஒன்றுக்கு ஒன்று முரண்படுகின்றனவாம்!.

//குர்ஆன் வசனம் 2:30 இன்படி மனிதனைப் படைக்கப் போவதாக இறைவன், மலக்குகளிடம் தன்முடிவை தெரிவிக்க வேண்டிய காரணம் என்ன? //

நபிகளார் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதினாவில் தங்கியிருந்தபோது அருளப்பட்ட சூரத்துல் பகராவிலில் இவ்வசனம் உள்ளது. இஸ்லாத்தின் மிக முக்கிய வாழ்வியல் தத்துவங்களும் இதே அத்தியாயத்தில்தான் உள்ளன.

அடைக்கலம் கொடுத்த மதினாவாசிகளில் பெரும்பாலோர் யூதர் மற்றும் கிறிஸ்தவர்களாக இருந்ததால் அவர்களின் வேதங்களில் சொல்லப்பட்ட வரலாற்றுச் செய்திகளையும் குறிப்பிட்டு அல்லது மெய்ப்பித்து உண்மை மார்க்கத்தைச் சொல்ல வேண்டியிருந்தது. அதன்படி மலக்குகள்-அல்லாஹ் இடையேயான உரையாடலைக் குறிப்பிட்டபோது மதினாவாசிகள் மறுப்புத் தெரிவிக்காமல் கேட்டதற்குக் காரணம் அவை அவர்களின் வேதத்திலும் சொல்லப்பட்டிருந்தவை என்பதேயாகும்! ஆக, ஓரிறை நம்பிக்கையாளர்கள் இடையே இவ்விசயங்களில் மாற்றுக்கருத்தோ ஐயமோ எழவில்லை.

****

இரத்தம் சிந்தி குழப்பம் விளைவிக்கும் மனிதர்களைக் குறித்து அவற்றை முன்னெப்போதும் அறிந்திராத மலக்குகளால் எப்படிக் கணிக்க முடிந்தது?இதேபோல் ஏற்கனவே என்னேரமும் துதித்துக் கொண்டிருக்க மலக்குகள் இருக்கும்போது எதற்கு தன்னைத் தொழுவதற்காக மனிதர்களைப் படைக்க வேண்டும் என்றும் கேட்கலாம்!



எவ்விதத்திலும் ஒப்புமையற்றவனாகிய இறைவன்,தன்னைவிடத் தகுதியில் குறைந்த படைப்பினத்தைப் படைத்து அவை தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது வல்ல இறைவனுக்குத் தகுதியுடையாதா? மலக்குகளைப் போன்றே சதாதுதிப்பவர்களாக எல்லா மனிதர்களையும் படைத்திருக்கலாமே! இதனால் இறைவனுக்குக் கட்டுப்படாதவர்கள் நரகம் செல்வது தவிர்க்கப்பட்டு இருக்குமே என்றும்கூட பகுத்தறிவுத்தனமாக நிறையக் கேட்கலாம். கேள்வி மட்டும் கேட்பதல்லவே பகுத்தறிவு!

திருக்குர்ஆன் வசனம் 2:30லேயே இக்கேள்விகான பதிலும் இருக்கிறது! "நீங்கள் அறியாதவற்றை எல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்". மனிதன் படைக்கப்படுவதற்கு முன்பு இறைவன் உரையாடிய படைப்பினமாக மலக்குகள் இருந்திருக்கிறார்கள். அவர்களுடன் எந்தமொழியில் இறைவன் உரையாடினான், எங்கு உரையாடினான்? ஏன் உரையாடினான் என்பவைகள் குறித்து யாராலும் விளக்க முடியாது.

ஏனென்றால் அவ்வாறு விளக்குபரும் அதை அறிந்திருந்தால் மட்டுமே விளக்க முடியும்!

//குழப்பமும், இரத்தங்களை ஓட்டச் செய்யவும் மனிதர்கள் (பன்மை) தேவை. மேலும் மனிதனின் உடலமைப்பு, அவனின் திறமை,குணம், செயல்பாடுகள் மற்ற எல்லா விபரங்களும் இறைவனைத் தவிர யாருக்கும் தெரியாது. இறைவன் மட்டுமே அறிந்த படைப்பின் ரகசியம் மலக்குகளுக்கு தெரிந்தது எப்படி?//

மலக்குகளே இதற்கும் பதிலைச் சொல்லியதாக அதே அத்தியாயத்தில் 2:32 உள்ளது. "....(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக் கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை......"

ஆக,மனிதர்கள் குறித்தக் கேள்வியில் மலக்குகளின் கணிப்புகள் சரியல்ல என்பதாலும் அவர்களே "எங்களுக்குக் கற்றுக் கொடுத்தவை தவிர எதைப் பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை" என்று ஒப்புக் கொண்டு விட்டதாலும் அவர்கள் பரமரகசியம் எதையும் அறிந்திருக்கவில்லை!

//மலக்குளின் கூற்று மிக மிகச் சரியானது.மலக்குளின் கணிப்பு சிறிதளவும் தவறவில்லை.மனிதனைப்போல சுயமாகசெயல்பட முடியாத மலக்குகளால் எப்படி மனிதனைப்பற்றி மிகத் துள்ளியமாக கணிக்க முடிந்தது?//

மிகத்துல்லியமாக அவர்கள் எங்கே கணித்தார்கள்? மனிதர்கள் எல்லோரும் இரத்தம் சிந்துவார்கள் என்றல்லவா தவறாகக் கணித்திருந்தார்கள்!! காந்தி, தெரஸா போன்று எத்தனையோ ரத்தம் சிந்தாத மனிதர்களும் பிறப்பார்கள் என்பதை மலக்குகள் கணிக்கவில்லை என்பதால் மலக்குகளின் கணிப்பு துல்லியமற்றது!

//மனிதர்களை பூமியில் படைப்பதும், மனிதனின் வீழ்சிக்குக் காரணமும் இறைவன் நாட்டமே என்பதை மேற்கண்ட வசனம் உறுதி செய்கிறது. பிறகு ஏன் ஆதாம் தண்டிக்கப்பட வேண்டும்? //

அக்கிரமக்காரன் தண்டிக்கப்படத்தானே வேண்டும்! அதேஅத்தியாயம் 2::35 ல் "நீரும் உம்மனைவியும் அச்சுவனத்தில் குடியிருங்கள்; மேலும், நீங்கள் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாகப் புசியுங்கள். ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச் செய்தால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்" என்று சொன்னபிறகும் கட்டளையைமீறி அக்கிரமம் செய்ததால் தண்டிக்கப்பட்டார்!

ஒருசமயம் அவர்கள் இறைக்கட்டளைக்குக் கட்டுப்பட்டிருந்தார்களென்றால் அவர்களின் கோடாணுகோடி சந்ததியினரும் சுவர்க்கத்திலேயே பிறந்து, வளர்ந்திருப்போம்! கோடாணுகோடி பேரின் சுகபோக வாழ்க்கைக்கு வேட்டு வைத்தவர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவது நியாயம்தானே?!
//இன்று மனிதனின் இழிவான வாழ்க்கைக்கு யார் காரணம்? இப்லீஸின் மோசடியா? அல்லது இறைவனின் விதியா?/

இறைவனின் விதிக்குக் கட்டுப்படாமல் இப்லீசின் சதிவலைக்கு உடன்பட்ட மனிதனே காரணம்! உ.ம். ஆதாம்!!! (ஆதம் அலைஹி...)

****************

மற்றக் கேள்விகளையும் முழுமையாக வைத்தபின்னர் பதில் கொடுக்க முயற்சிக்கிறேன்!

"தேடுதலின் பொழுது கிடைத்தவைகள் முழுவதும் என் சுயஅறிவில் நான் கண்டவைகள் எனவே இதனால் ஏற்படும் விளைவுகள் நன்மை/தீமைகள் என்னை மட்டுமே சேர வேண்டும்" எல்லாம் அவன் செயல்!

Labels: , ,

Sunday, March 29, 2009

இதயத்தில் நிரந்த(?) இடம்!!!


சென்ற மக்களவைத் தேர்தலில் நாற்பது தொகுதிகளையும் வென்ற மயக்கம் கலைஞருக்கு இன்னும் தெளியவில்லை.இல்லாத 3.5% இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்கியதற்காக கலைஞருக்கு நன்றி தெரிவித்த தமுமுகவை கலைஞர் நம்பவைத்து நன்றாகக் கழுத்தறுத்து உள்ளார்.

மக்களவைத் தொகுதிக்கான கூட்டணி குறித்தப் பேச்சுவார்த்தையில் மனிதநேய மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வெளியூரிலும் வெளிநாட்டிலும் இருந்த காரணத்தாலும் அவர்களின் மொபைல் போன் நம்பர்கள் கலைஞருக்குக் கிடைக்காத காரணத்தாலும் மமக கேட்டிருந்த மக்களவைத் தொகுதிகள் அவர்களுக்காக ஒதுக்கப்படவில்லை!

மக்களவைத் தேர்தல் முடிந்தபிறகு அதிமுக கூட்டணியினர் திமுக கூட்டணியைவிடக் கூடுதல் இடங்களில் வென்று, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க அதிமுகவின் தயவு தேவைப்படும் பட்சத்தில் மாநிலத்தில் திமுகவை கவிழ்த்துவிட ஜெயலலிதா காய் நகர்த்தக் கூடும். அதிமுக கூட்டணிக்குக் கணிசமான இடங்கள் கிடைக்காவிட்டாலும் தேர்தல் முடிந்த கையோடு மைனாரிட்டி திமுக அரசிற்கு பாமக வழங்கிவரும் ஆதரவை விலக்கிக் கொண்டாலும் கலைஞர் ஆட்சி கவிழும் என்பது நிச்சயம்.

கலைஞர் ஆட்சி நீடிக்க வேண்டுமென்றால் மத்தியில் பெரும்பான்மையோடு மீண்டும் காங்கிரஸ் ஆட்சி (அதிமுக தயவின்றி) உண்டாக வேண்டும். இதுவரை ஈழத்தமிழருக்காக ஆட்சியைத் துறந்திருப்பதாக உடன்பிறப்புக்களுக்குக் கடிதம் எழுதிவரும் கலைஞர், இம்முறை அதையும் சொல்லியழ முடியாத இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறார்!

மனித நேயமக்கள் கட்சிக்கு இதுவே முதல் அரசியல் அனுபவம் என்பதால் கலைஞரின் ராஜ தந்திரம் இவர்களிடம் நன்றாகவே வேலை செய்துள்ளது. மமகவுக்கு அதிகபட்சம் ஒரு தொகுதியை மட்டுமே ஒதுக்க முடியும் என்று ஒற்றைக்காலில் நின்று, நேற்றிரவுவரை முடிவு எட்டப்படாததால் வழக்கத்திற்கு மாற்றம் செய்யாமல் இதயத்தில் இடம் கொடுத்துள்ளார்.



பேராசிரியர் காதர் முகைதீன் முஸ்லிம் லீக் சார்பில் வைத்த அனைத்துக் கோரிக்கைகளையும் கணிவோடு ஏற்றுக்கொண்டு அவருக்கும் இதயத்தில் இடமும் அத்துடன் வேலூர் நாடாளு மன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடவும் வாய்ப்புக் கொடுத்துள்ளார்.இனி மனிதநேய மக்கள் கட்சி ஏற்கனவே முழங்கியதுபோல் தனித்துப் போட்டியிடுவார்களா? அல்லது கலைஞரின் அன்புக்கு அடிமையாகிப் பணிந்து போவார்களா? அல்லது இரண்டும் வேண்டாம் என்று தமிழ்க்குடி தாங்கியைப்போல் தரமான அரசியல் செய்வதற்கு இரட்டை இலைப் பக்கம் சாய்வார்களா?என்று விரைவில் தெரிந்துவிடும்.'வெறும் அன்பு'க்கு அடிமையாகப் போவதில்லை என்பது மமக தலைவர்களின் அண்மைப் பேச்சுகளிலிருந்து தெளிவாகி விட்டது.

எனவே, புதிதாக நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் முன் இருக்கும் தெரிவுகள்:

1) அதிமுகவிடம் 2-3 தொகுதிகளைக் கேட்டுப்பெறுவது.

2) விஜயகாந்தின் தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பது.

3) முஸ்லிம்களுக்கு வெற்றிவாய்ப்புள்ளத் தொகுதிகளில் மட்டும் சுயமரியாதையுடன் தனித்துப் போட்டியிடுவது.

திமுக-காங்கிரஸை வீழ்த்துவதற்காக எதையும் செய்யத் தயாராக உள்ள ஜெயலலிதா, மமகவுக்கு 2-3 சீட்டு வழங்கி கலைஞருக்கு செக் வைக்கலாம்.(இந்நிலையில் தமுமுக வசமுள்ள வக்ப் வாரியப்பதவி பறிபோகும் பட்சத்தில் அதற்கு எதிர்வினையாகத் திருச்சி கலைஞர் அறிவாலயம் கட்ட ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பிரச்சினையை அதிமுக ஆதரவுடன் மமக கிளறக்கூடும் என்பதால் அனேகமாக அதில் கலைஞர் கைவைக்க மாட்டார்).

தேமுதிகவை பொருத்தமட்டில் வட/தென்மாவட்டங்களில் மட்டுமே அதற்கு அதிகச் செல்வாக்கு இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு பிற மாவட்டங்களில் தேமுதிகவுடன் மமக கூட்டணி வைத்தால், முஸ்லிம் பெரும்பான்மையுள்ள தஞ்சை, நாகை, ராமநாதபுரம், வட சென்னை பகுதிகளில் திமுக வாக்குவங்கியைத் தேமுதிக ஆதரவுடன் பிரித்தெடுத்து முஸ்லிம்களின் பலத்தை உணர்த்தலாம்.வெற்றி பெறமுடியாவிட்டாலும் நிச்சயம் திமுகவின் தோல்விக்குக் காரணமாக இருந்தால் இதயத்தில் நிரந்தர இடம் ஒதுக்குவது குறித்து அடுத்தடுத்தத் தேர்தல்களில் கலைஞரை இன்னும் கொஞ்சம் யோசிக்க வைக்கலாம்.

மமக ஒத்தக்கருத்துடைய சிறுகட்சிகளுடன் கூட்டணி வைத்துத் தனித்துப் போட்டியிட்டாலும் திமுக/அதிமுக கூட்டணியின் வெற்றி/தோல்விக்குக் காரணமாக ஆகிவிடுவர்.எனவே, எதிர் காலத்தில் தமிழக திராவிடக் கட்சிகள் இனிவரும் தேர்தல்களில் கணிசமான இடங்களை முஸ்லிம்கள் கேட்காமலேயே ஒதுக்கக் கூடும்!

கூடுதல் விளக்கங்களுக்கு "அரசியல் கூட்டணியும் முஸ்லிம்களும்" குறித்து சத்தியமார்க்கம்.காம் தளத்தில் 16.3.2009இல் எனது மற்றுமொரு கட்டுரை வெளியாகியுள்ளது : http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1184&Itemid=394

(சற்றுமுன்வரை மமக,அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேசிவருவதாகச் செய்திகள் வந்துள்ளன)

Labels:

Tuesday, March 24, 2009

தேசிய அவமானம் என்றால் என்ன?

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் மக்களவைத் தேர்தலை உலகமே ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது. 10 ஆயிரம் கோடி ரூபாய்களுக்கும் மேலாகச் செலவளித்து ஐந்து கட்டங்களாக நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலில், நாட்டின் முக்கியமான நிகழ்வுகளும் எதிர்காலத் திட்டங்களும் பொதிந்துள்ளன.

காங்கிரஸ் கூட்டணி அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக அல்லது ஆதரவாக, எதிர்க்கட்சியான பாஜகவின் மதவாத அரசியலை நிர்ணயிக்கும் அளவுகோளாக விளங்கப்போகும் மக்களவைத் தேர்தல் முடிவுகளைப் பொருத்தே உலகப் பொருளாதார மந்தநிலையின் எதிர்விளைவுகள், அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், சேதுக்கால்வாய் திட்டம், பாபர் மசூதி, சிறுபான்மையினர் இடஒதுக்கீடு, பாகிஸ்தானுடனான அயலுறவுக் கொள்கை போன்ற அதிமுக்கியப் பிரச்சினைகளை எதிர்கொண்டு 2020 இல் வல்லரசு ஆவதற்கு நடைபோட்டுவரும் இந்தியாவின் எதிர்காலம் அடங்கியுள்ளது.

இவை எதையும் முக்கியப் படுத்தாமல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் நடத்துவது குறித்த விவாதங்கள் தற்போது நடந்து வருகின்றன. நமது வாழ்க்கைப் பிரச்சினையுடன் தொடர்புடைய தேர்தலைக் கணக்கில் கொள்ளாமல் பணக்கொழுப்பெடுத்த முதலாளிகளும் அவர்களின் எச்சில் துண்டுகளுக்காக நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு அலையும் ஊடகங்களும்கூட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைக் குறித்துக் கவலையாக செய்தி வெளியிட்டு வருகிறார்கள்.



"ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நம்நாட்டில் தேர்தல் நேரத்தில் நடத்த முடியாமல் போனதற்கு காங்கிரஸ் மற்றும் மாநில அரசுகளே காரணம்" என்று கூறி பாஜக தனது தேசபக்தியைக் காட்டியுள்ளது. குஜராத்தில் நடந்த முஸ்லிம் இனப்படுகொலையில் 3000க்கும் அதிகமான முஸ்லிம் விக்கெட்களை வீழ்த்தியும், இலட்சக் கணக்காணோரை சொந்த பெவிலியனுக்குத் திரும்ப முடியாமல் செய்த குஜராத் இனப்படுகொலை ஆல்ரவுண்டரும் கேப்டனுமான நரேந்திர மோடி, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மாற்றப்பட்டதை "தேசிய அவமானம்" என்று சொன்னதுதான் உலக மகா காமெடி!

"தேசிய அவமானம் என்பது குஜராத்தில் நடந்ததுதான்" என்பது மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு இப்போதுதான் நினைவுக்கே வந்திருக்கிறது. இது தேர்தல் நேரமல்லவா?
சினிமாவையும் கிரிக்கெட்டையும் பாராளுமன்றத்தில் விவாதித்து, பாராட்டுத் தெரிவிக்கும் கேடுகெட்ட நிலை நமது நாட்டைத் தவிர உலகிலேயே எங்கும் சாத்தியமில்லை. நாட்டின் இளைஞர்களோடு தொடர்புடைய துறைகள் என்றாலும் கிரிக்கெட்டைவிட போற்றுதலுக்குரிய விளையாட்டுக்கள் நிறையவே உள்ளன. அதெற்கெல்லாம் இல்லாத அக்கரை/கரிசனம் கிரிக்கெட் விளையாட்டின்மீது மட்டும் இருக்கிறதென்றால் அதில் பெரும் பணமுதலைகளுக்குத் தொடர்புள்ளது என்பதைத் தவிர வேறென்ன?

இலங்கையில் ஈழத்தமிழர்களை சிங்கள அரசு கொன்றொழிக்கும்போது, தமிழகத்தில் ஈழத்தமிழர் ஆதரவு கொளுந்து விட்டு எரிந்தது! அரசியல் கட்சிகளின் பேரணிகளில் இளைஞர்களின் பங்களிப்பு அரசியல்வாதிகளின் வயிற்றில் புளியைக் கரைத்தது! இது மத்திய-மாநில ஆட்சியாளர்களுக்கு எதிராகத் திரும்பி விடக்கூடாது என்பதற்காக இலங்கையில் 20x20 மேட்சுகளை நடத்தி இளைஞர்களின் கவனத்தைத் திசைதிருப்பியதும் இந்தக் கேடுகெட்ட கிரிக்கெட்தான்!

மன்னர்களுக்கு எதிராக இளைஞர்கள் சிந்திக்கக்கூடாது என்பதற்காக ஒலிம்பிக் போன்ற விளையாட்டுக்களை நடத்தி இளைஞர்களின் கவனம் விளையாட்டில் மட்டும் வியாபித்திருக்கும்படி சதி செய்து ரோமானிய மன்னர்கள் ஆட்சி சுகம் கண்டார்கள். அரசியல்வாதிகளின் கிரிக்கெட்டின் மீதான அதீத அக்கரையின் பின்னணியும் இதுவாகத்தான் இருக்கும்.

நாட்டின் தலைமையையும் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கப்போகும் தேசியக் கடமையான தேர்தலைவிட கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களைப் பார்க்கும்போது அறிஞர் பெர்னாட்ஷா சொன்ன "11பேர் சேர்ந்து 11000 பேரை முட்டாளாக்கும் விளையாட்டே கிரிக்கெட்" என்பது நினைவில் வருகிறது.

பாரத மாதகீ ஹேட்ஸ் அப்!

Labels:

பார்வையாளர்கள்

    சுட்டிகள்

      சத்தியமார்க்கம்.காம்

eXTReMe Tracker