பெண்ணுரிமை - ஓர் இஸ்லாமியப் பார்வை-2
என்ன இது அநியாயம்? பெண்கள் அனைவரும் முழுச் சுதந்திரம் பெற்று விட்டார்கள். பெண்கள் இன்று சுவாசிக்கின்றார்கள் என்றால் அந்த சுவாசக் காற்றில் சுதந்திரத்தைக் கலந்து விட்டதே நாங்கள் தான் என மார்தட்டிக் கொள்ளும் இன்றைய மேலைநாடுகளிலும் சரி, நமது இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளிலும் சரி பெண்கள் தினத்தன்று பெண்கள் மீண்டும் கோரிக்கைப் பேரணி நடத்துகிறார்கள் என்றால் அவர்கள் இன்னும் முழுச் சுதந்திரம் பெறவில்லை என அல்லவா கருத வேண்டியுள்ளது.
பெண்களின் விடுதலை இயக்கங்கள் வளர்ந்த வரலாறு
பிரிட்டன்:
கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு தான் பிரிட்டடினில் பெண் விடுதலை மற்றும் உரிமை கோரிப் போராட பெண் விடுதலை இயக்கங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அவ்வாறு தோற்றுவிக்கப்பட்ட பெண் விடுதலை இயக்கங்கள் யாவும் பெண் என்பவள், பாலியல் நிலையில் அவளை ஒரு கீழ்த்தரமான இனமாக எண்ணி, சமூக, பொருளாதார, அரசியல் நிலைகளில் அவர்களை ஒதுக்குவதை எதிர்த்தும், இத்தகைய நிலைகளில் அவர்களுக்கு இழைக்கப்படும் சமூகப் பாகுபாடு, துரோகங்கள் ஆகியவற்றை எதிர்த்தும், ஆணும் பெண்ணும் சமம், ஆணைப் போலவே பெண்ணுக்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிலைகளில் சம அந்தஸ்து வேண்டியும், இவற்றுக்கான சட்டப் பாதுகாப்பு வேண்டியும், இவற்றை பெண்ணினத்திற்குப் பெற்றுத் தரவும் தான் பெண்ணுரிமை இயக்கங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
இந்த நோக்கத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல முதன் முதலில் 1792 ஆம் ஆண்டு மேரி வுல்ஸ்டோன்க்ராப்ட் (Mary Woolstone Crabt) எனும் பெண்மணி, பெண் உரிமைப் போராட்டம் ((Vindication of the Rights of Women) எனும் வெளியீட்டை வெளியிட்டார்.
அதன் பின் 1903 ஆம் ஆண்டு தீவிர பெண் அரசியல் இயக்கம் ஒன்று, பெண்ணுக்கு ஓட்டுரிமை வேண்டும் எனக் கோரி, எம்மிளின் பாங்கியுர்ஸ்ட் (Emmeline Pankhurst) என்ற பெண்ணின் தலைமையின் கீழ், பெண்களின் சமூகம் மற்றும் அரசியல் சங்கம் (Women’s Social and Political Union - WSPU) என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
எம்மிலின் தலைமையில் WSPU சங்கப் பெண்கள் வயது வித்தியாசமின்றிக் கலந்து கொண்டார்கள். இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்கள் ஒன்று கூடும் சங்கக் கட்டிடம் பூட்டப்பட்டது. பாராளுமன்ற முற்றுகையின் போது, பாராளுமன்றப் படிகளில் இருந்து உருட்டியும் விடப்பட்டார்கள்.
1914 ஆம் ஆண்டு முதலாவது உலக மகா யுத்தம் தொடங்கியதால், போரின் போது நாட்டுக்கு உதவ வேண்டும் எனும் முடிவின் கீழ் போராட்டம் கைவிடப்பட்டு, யுத்தம் சம்பந்தமான தொழிற்சாலைப் பணிகளில் தம் ஒத்துழைப்பைத் தந்தார்கள். இதன் காரணமாக அரசாங்கத்தின் மூலம் தமக்கு ஏற்பட்ட எதிர்ப்பை மட்டுப்படுத்தி, தமக்கு சாதகமான சூழலை உருவாக்கினார்கள். இவர்கள் தொடர் போராட்ட முறைகளினால் 1918 ல் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு முதன் முதலாக ஓட்டுரிமை வழங்கப்பட்டது. 1928 ல் ஓட்டுப் போடும் வயது 21 ஆகக் குறைக்கப்பட்டது.
பிரிட்டன் நாடு ஒரு பெண்ணால் எலிசபெத் குடும்பத்தால் ஆளப்பட்டு வரும் ஒரு நாடு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஒரு பெண் ஆளும் நாட்டிலே ஒரு பெண் ஓட்டுரிமை பெற்றுக் கொள்ள 2 நூற்றாண்டுகள் பிடித்துள்ளன. என்ன வேதனையான விசயம்!!!? இவர்கள் தான் பெண்ணுரிமை பற்றிப் பேசும் பெண்களின் காவலர்கள்?!
அமெரிக்கா :
அமெரிக்காவைப் பொறுத்தவரை, பெண்களுக்கான இயக்கம் என்பது முதன் முதலில் 1848 ல் எலிசபெத் கேடி ஸ்டேன்டன் என்ற பெண்மணியால் துவங்கப்பட்டது. இங்கு 1848 ல் கூடிய மாநாட்டில் நீக்ரோ அடிமைகள் விடுதலைப் பிரகடனத்துடன் (அமெரிக்காவில் இன்றும் இவர்கள் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றார்கள். நிறவேற்றுமை, நிறவெறி கொண்ட வெள்ளை சமூகம் இவர்கள் இன்னும் அடக்கியாண்டு வருகின்றது மட்டுமல்லாமல் படுபாதகமாகவும் கொலை செய்யப்படுகின்றார்கள்). பெண் விடுதலை மற்றும் பெண்ணுரிமை சம்பந்தமான பிரகடனமும் வெளியிடப்பட்டது.
அதன் பின் 1850 ல் லூசி ஸ்டோன் எனும் பெண்மணியின் தலைமையின் கீழ் தேசிய பெண்கள் உரிமை மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. அதன் பின் மேற்கண்ட இரண்டு பெண்மணிகளின் அமைப்பும் ஒன்றிணைந்து சூசன் பி. அந்தோணி எனும் பெண்மணியின் தலைமையின் கீழ் பெண்களின் தேசபிமானிகள் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு, 1878 ல் பெண்களுக்கு ஓட்டுப் போடும் உரிமை வேண்டும் எனக் கோரி, அதைச் சட்டமாக்க கோரிக்கை அனுப்பினார்கள்.
அமெரிக்காவில் உள்ள மாநிலங்களில் வியோமிங் மாநிலம் தான் முதன் முதலாக 1890 ல் பெண்களை ஓட்டுப் போட அனுமதித்தது. அமெரிக்க தேசியப் பெண்களின் ஓட்டுரிமைக் கூட்டமைப்பு என்ற அமைப்பு 1900 ல் கேர்ரி ஜேப்மேன் காட் என்ற பெண்ணின் தலைமையில் இதன் செயல்பாடுகள் முடுக்கி விடப்பட்டன. இந்த அமைப்பு நடத்திய பல போராட்டங்கள், கூட்டங்கள், மாநாடுகள் பல படித்த பெண்களையும், உயர்வர்க்கப் பெண்களையும் கவர்ந்தது. அதே போல முழு நேர அரசியலில் ஈடுபடும் பெண்களையும், அமைப்புக்கான நிதிகளையும் அதிகரித்தது.
மேற்கண்ட குழுக்கள் பெண்ணுரிமை சம்பந்தமான பல்வேறு விதமான கோரிக்கைகளை முன் வைத்தும், ஆண் பெண் சமத்துவம் மற்றும் விடுதலை வேண்டியும் தம் போராட்டத்தை ஆரம்பித்தன. மேலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை வேண்டும் என்னும் கோரிக்கையை 1923 ல் தேசியப் பெண்கள் சங்கள் முன் வைத்துப் போராட ஆரம்பித்தது. இக்கோரிக்கை 50 வருடங்களாக செயலற்றதாகவே ஆட்சியாளர்களால் கிடப்பில் போடப்பட்டது.
1960 ல் அமெரிக்காவில் பெண்ணியம் பற்றிப் பேசும் தீவிர அமைப்புகளும், சூழ்நிலைகளும் தோன்றக் கீழ்க்கண்ட பெண்ணியம் பற்றி ஆய்வறிக்கைகள் காரணமாக இருந்தன.
- The Second Sex (1953) By Simone De Beauvoir
- The Feminine Mystique (1963) By Betty Friedan
- Sexual Politics (1969) By Kate Millett
- The Female Eunuch (1970) By Gamaine Greer
இத்தகைய பெண் இயக்கங்களில் முக்கியமானவைகள் சில:
National Organization for Women (NOW) பெண்கள் தேசிய அமைப்பு - பெட்டி ஃபிரைடன்
National Women’s Political Caucus – 1971. தேசிய பெண்களுக்கான அரசியல் அமைப்பு
என்ற மேற்கண்ட அமைப்பு 1971ல் தேசிய அளவில் மிகப் பிரபலமான பெண் இயக்கவாதிகளான பெல்லா அப்ஸக் (Bella Abzug), செர்லி சிசோம் (Shirley Chisholm) மற்றும் குளோரியா ஸ்டெய்னம் (Gloria Stninem) என்பவர்கள் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
அதன்பின் 1973 ல் The Equal Rights Amendment Ratification Coun உடை சம உரிமை சட்ட வரைவு அமல்படுத்தும் குழுமம் என்ற அமைப்பும், அதே ஆண்டு 1973 ல் Coalition of Labour Union Women பெண் தொழிலாளர்கள் கூட்டமைப்புச் சங்கம் போன்ற அமைப்புகளாகும்.
National Organization for Women (NOW) என்ற அமைப்பால் பரவலாக நடத்தப்பட்ட போராட்ட முறைகளால், பெண்களுக்கான சமஉரிமை சட்ட வரைவு, எனும் சட்ட முன் வரைவை அமெரிக்க அமைப்புச் சட்டத்தில் கொண்டு வந்து அமுல்படுத்தும் வகையில் இப்பிரச்னை பூதகரமாகக் கிளம்பியது. பின் பெண்களுக்கான சம உரிமை சட்ட வரைவு 1971 ல் அமெரிக்க மாநிலங்களவை உறுப்பினர்களாலும், பின் 1972 ல் அமெரிக்க மேல்சபை உறுப்பினர்களாலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இருப்பினும் 1982 ஜுன் 30 ல் இந்தச் சட்டமானது 3 மாநிலங்களில் 38 ஓட்டுக் பற்றாக்குறை காரணமாக அமுல்படுத்த முடியாமல் தோல்வியைத் தழுவிக் கொண்டது. மீண்டும், இச்சட்டத்தை அமுல்படுத்த எடுத்த முயற்சிகள் தோல்வியையே கண்டன.
மேலே நீங்கள் கண்டவைகள் யாவும் நாங்கள் பெண்ணினத்தின் காவலர்கள் என மார்தட்டிக் கொள்ளும் ஒரு சமூகத்தில் தம் உரிமைகளைப் பெற பெண்கள் போரடிய, போராடிக் கொண்டிருக்கின்ற அவலத்தைக் காட்டுகிறது.
மேலும் 1980 லும் பின் 1990 லும் அதற்குப் பின்பும் இந்தப் பெண்ணுரிமை இயக்கங்கள் பெண்களின் பொருளாதாரம், அரசியல், சமூகத் தளங்களில் பெண்கள் முன்னேற்றம் காண வேண்டி தமது கவனத்தை ஒருமுகப்படுத்தின.
ஒரு புறம் இவர்கள் ஆணுக்கு நிகராக உயர நினைத்தாலும் இயற்கையாகவே பெண்களின் உடலில் உள்ள தகவமைப்புகள் அதிக வேலைப்பளு, வீட்டுப் பொறுப்புகள், ஆண்வர்க்கத்தின் உதாசீனம் ஆகியவை அவர்களுக்கு வெறுப்புணர்வையே வளர்த்தன.
இவர்கள் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக எந்த சம உரிமை வேண்டும் என்பதற்காகவும், பெண்ணுக்கும் உயிர் உண்டு அவளும் ஒரு மனிதப் பிறவியே, ஆணுக்கும் உள்ளது போன்ற அரசியல், எழுத்துரிமை, பேச்சுரிமை, சொத்துரிமை போன்ற சமூக உரிமைகளும் வேண்டும் என தம் போராட்டத்தை தொடங்கினார்களோ அவற்றில் அவர்கள் ஓரளவு வெற்றி பெற்றாலும், இன்று அந்தப் போராட்டங்கள் வலுவிழக்கச் செய்யப்பட்டு திசை திருப்பப்பட்டுள்ளன.
இதை கடந்த 30 ஆண்டுகளாக பெண்கள் சுதந்திரம் மற்றும் உரிமைக்காகக் குரல் கொடுத்து வரும் க்ரீர் அவர்களின் சமீபத்திய பேட்டி நிரூபிக்கின்றது. 1970 ல் இருந்து பெண் விடுதலைக்காகப் போராடி வரும் ஜெர்மைன் க்ரீர் (60) என்ற பெண்மணி, சமீபத்தில் லண்டனில் (மார்ச், 7, 1999) ல் நடந்த உலகப் பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் பொழுது, இன்றும் பெண்கள் அடக்குமறையில் இருந்தும், ஆணாதிக்கத்தில் இருந்தும் விடுபடவில்லை என்று கூறினார்.
இன்று குடும்ப வாழ்க்கையிலே பெண்கள், கொடூரமான முறையில் கணவனால் நடத்தப்படுகிறார்கள். வீட்டிலே அவர்களை எதையுமே எதிர்த்துச் செயல்படாத புழப் பூச்சிகளைப் போல நடத்தப்படுகிறார்கள். வெளியிலோ அவர்கள் ஆண்களின் குரூரமான இச்சைக்கும் பொழுது போக்கிற்காகவும், கவர்ச்சி காட்டும் அடிமைகளாகவும், கடைச் சரக்கிலோ கவர்ச்சி காட்டும் போதைப் பொருட்களாகவும் பயன்படுத்தப்படுகின்றார்கள்.
இவர் அரசியலையும் விட்டு வைக்கவில்லை. கடந்த தேர்தலின் போது பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் சில பெண்களை பாராளுமன்றத்துக்குக் கொண்டு வந்து, இடம் நிரப்பும் பணி என்பதை விட, அவரது கொள்கைகளைக் கண் மூடி ஆதரிக்கும், எதிர்த்துப் பேசாத ஒரு ஆட்டு மந்தைகளை உருவாக்கி வைத்துள்ளார் என்று விமர்ச்சித்துள்ளார்.
இவர் சமீபத்தில் எழுதிய புதிய வெளியீடான “The Whole Women” எனும் புத்தகத்தில் முதலில் நாங்கள் துவங்கிய ஆணுக்குப் பெண் சமம் எனும் கொள்கைப் போராட்டம் தோல்வியைத் தழுவியது மட்டுமல்லாமல், பலபடுபாதக விளைவுகளையும் ஏற்படுத்தி உள்ளது எனக் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் பிறந்த இவர் பிரிட்டிஷ் பல்கலைக்கழகம் ஒன்றில் பணியாற்றி இருக்கிறார். இவர் கூறிய கருத்துக்கள் ஏதோ அரபு நாட்டில் உட்கார்ந்து கொண்டு பேசவில்லை. மாறாக, பெண் விடுதலைக்காகவும், மதங்களின் அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் தஸ்லீமா நஸ்ரீன்களுக்காகக் குரல் கொடுப்பதற்காகவே இருக்கிறோம் என மார்தட்டிக் கொள்ளும் உலகின் வளர்ந்த சமூகம் எனக் கூறிக் கொள்ளும் பிரிட்டனில் இருந்த பேசி உள்ளார் என்பது, அவர்களின் பொய் முகமூடியைக் கிழிப்பது போல் உள்ளது எனலாம்.