தமிழ்மணம் திரட்டியின் தளக்கட்டுப்பாடுகளால் சிறிது காலம் அடங்கி இருந்த மதத் துவேசப் பதிவுகள் அவ்வப்போது தலை தூக்கவே செய்கின்றன. இக்கட்டுப்பாடுகள் மத/தனி மனிதத் தாக்குதல் நோக்கத்தோடு எழுதும் தனிப்பதிவுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் குறைந்த பட்சம் பின்னூட்டங்களிலாவது முஸ்லிம் வலைப்பதிவர்களை வம்புக்கு இழுக்காவிட்டால் சிலருக்குத் தூக்கமே வராது போலும்!
தமிழ் வலைப்பூவில் இஸ்லாமிய எதிர்ப்பைத் தனிப்பதிவாக பதிவது அல்லது பெயருக்குச் சிலவரிகளை எழுதி விட்டு, சம்பந்தப்பட்டச் செய்தியின் சுட்டியைக் கொடுப்பது அல்லது எதுவும் இல்லாத பட்சத்தில் பின்னூட்டம் வழியாக முஸ்லிம்களை விமர்சித்து நிஜமாகவே பின்னூட்டம் (!) இட்டுச் செல்வது . இவையே சில தமிழ் வலைப் பதிவர்களின் யுக்தியாக இருந்து வருகின்றது. சுருங்ககக் கூறின் பின்னூட்டமின்றி அல்பாயுசில் காணமல் போகும் வலைப்பதிவுகள், இஸ்லாமிய எதிர்ப்புவாதம் கலந்து எழுதினால் சில நாட்கள்/வாரங்கள் காலம் தள்ள முடியும் அல்லது பிரபலமாக முடியும் என்பது எழுதப் படாத விதியாகி விட்டது.
முன்பெல்லாம் (தற்போதும்கூட) அவதூறாகவும் அநாகரிகமாகவும் முஹம்மது நபியைத் திட்டித் தீர்ப்பதை முழுநேரத் தொழிலாகக் (?!) கொண்டுள்ள நேசகுமார், ஆரோக்கியம் போன்றவர்கள் தவிர்த்து படித்த பண்பாளராகக் சொல்லிக் கொண்ட கால்கேரி சிவா கூட, தான் அரேபிய நாடுகளில் (சவூதி மற்றும் அமீரகம்) பட்ட கஷ்ட நஷ்டங்களாகச் சொன்ன பதிவில் வெகு திறமையாக இஸ்லாத்தையும் இணைத்து விமர்சிக்கத் தவறவில்லை. தனி அனுபவங்களைக் கூட இப்படி காழ்ப்பாக எழுத யார்தான் பயிற்சி கொடுக்கிறார்களோ? (இவ்வளவையும் செய்துவிட்டு தனக்கு இஸ்லாமியர்கள் மீதோ இஸ்லாத்தின் மீதோ கோபமில்லை என்ற டிஸ்க்ளைய்மர் வேறு!)
அவரின் அரேபிய அனுபவ்ங்கள் பதிவில் நான் பின்னூட்டமிட்ட போது என் முகவரியும் முகமும் காட்டச் சொன்னவர், பிறகு அனாணிமஸ் பெயரில் துவேசமாகவும், அநாகரிகமாகவும் (முஸ்லிம்களை முக்கால்!? பசங்க, துளுக்கன்கள் என்ற வசைகளுடன்) ஏளனப் பின்னுட்டங்களை அனுமதித்தது அவரின் பெருந்தன்மையா அல்லது சம்பந்தப்பட்டவர்களின் முகவரியும் முகமும் அறிந்தவரா என்பது அவருக்கே வெளிச்சம்!
இஸ்லாமிய எதிர்ப்புவாதங்களில் அடிக்கடி விவாதிக்கப்படும் விடயங்களில் முக்கியமானவையாகத் தீவிரவாதம், தலாக், பெண்ணுரிமை ,பலதாரமணம் ஆகியவற்றைச் சொல்லலாம். இவற்றில் தீவிரவாதம் தவிர்த்து மற்றவற்றால் பிற மதத்தவருக்கு இஸ்லாமிய வழிகாட்டல்கள்/கலாச்சாரம் எந்தவிதத்தில் தீங்காக இருக்கின்றன என்பதை அறிவார்ந்தச் சான்றுகளுடன் விவாதிக்க யாரும் முன் வருவதில்லை.
தீவிரவாதத்தை மட்டும் முஸ்லிம்களுடன் இணைத்துச் சொல்வதில் அப்படி என்ன சுகம் காண்கிறார்களோ தெரியவில்லை! தீவிரவாதம் என்பது முஸ்லிம்களின் குலச்சொத்தா என்ன ? தீவிரவாதத்திற்கு அளவுகோல் அதனைச் செய்பவன் முஸ்லிம் பெயர் தாங்கியாக இருக்க வேண்டும் என்ற வரைமுறை வகுத்த மனிதநேயக் காவலர்கள் எவரோ? இவர்களால் எங்காவது முஸ்லிம் அல்லாத எவராவது ஒருவர் கொல்லப்பட்டால் அதற்கு இஸ்லாமிய மதத் தீவிரவாதம் என்று குதிப்பவர்கள், உலகின் பிற பகுதிகளில் அமெரிக்க-பிரிட்டன் இராணுவத்தால் கும்பல் கும்பலாகக் கொல்லப் படுவதற்கும் குஜராத்தில் முதலமைச்சரின் பூரண ஆசியுடன் இனச் சுத்திகரிப்பு செய்யப்படுவதற்கும் என்னவகைத் தீவிரவாதம் என்று விளக்கினால் நன்றாக இருக்கும்!
பெரும்பாலும் நேர்மையாக எழுதும் சிலரின் பின்னூட்டங்களில் கூட ஒட்டு மொத்த முஸ்லிம் வலைப்பதிவர்களும் இப்படுகொலையை கண்டிக்கவில்லை என்பது போல் ஒரு குற்றச்சாட்டு இருந்தது. இதுபோன்ற சம்பவங்களின் போழ்து முஸ்லிம்களில் பலர் மவுனம் காப்பது அதனை ஆதரிப்பதாக அர்த்தமாகுமா? பின்னூட்டமிட்ட சிலர் தவிர்த்து மற்றவர்கள் எல்லாம் அச்செயலை ஆதரிக்கிறார்கள் என்று அர்த்தமா? எப்படியாவது முஸ்லிம் வலைப்பதிவர்களைத் தனிமைப்படுத்தி தீவிரவாதத்துடன் இணைத்து அழகு பார்த்து விட வேண்டும் என்ற சிலரின் நப்பாசையின் வெளிப்பாடே அவ்வகைப் பின்னூட்டங்கள்!
சமீபத்தில் ஆந்திரப் பொறியாளர் சூரியநாராயணாவை ஆப்கான் தீவிரவாதிகள் படுகொலை செய்தததைக் கண்டித்து நண்பர் ஆசிப் மீரான் எழுதிய பதிவின் பின்னூட்டங்களில் விசித்திரமான சிலவற்றைக் காண நேர்ந்தது. அதில் சூரிய நாராயனாவின் படுகொலையைக் கண்டிப்பதோடு முந்தைய தாலிபான் அரசினால் ஆப்கன் மக்களுக்குத் தேவையில்லை என்று இடிக்கப்பட்ட பாமியான் சிலை இடிப்பையும் இணைத்து அதுபற்றி எழுதிய என்னையும் கண்டிக்க வேண்டி இருந்தார் ஒருமுற்போக்குச் சிந்தனை கொண்ட வலைப்பதிவர்! (பாமியான் சிலை இடிப்புக்கும் சூரிய நாராயணாவின் படுகொலைக்கும் என்ன சம்பந்தம் என்று அவருக்கே வெளிச்சம். இது பற்றி எழுதியது கூட இஸ்லாம் பிற மத வழிபாட்டுத் தளங்களை இடிக்கச் சொல்வதாக அவதூறாக ஒருவர் எழுதியதற்கு பதிலாகத்தான் என்று நினைக்கிறேன்.)
சூரிய நாராயனாவைக் கொல்வதால் தாலிபான்களுக்கு என்ன இலாபம்? ஆப்கனில் பல்வேறு நாட்டுப் பணியாளர்களும் வாழும்போது இந்தியர்களை மட்டும் குறிவைத்துத் தாக்குவதன் நோக்கம் என்னவாக இருக்கும் என்பதை ஆராயாமல் அரைகுறைச் செய்திகளை வைத்துக் கொண்டு ஒருதலைப் பட்சமாகவும் இஸ்லாத்தை விமர்சிப்பதும் எந்த வகை நியாயம்?
சகோதரர் ஆசிப் மீரான் இப்படுகொலையைக் கண்டித்து எழுதிய பதிவில் பின்னூட்டமிட்ட நேசகுமார்,
"ஒரு அனானிமஸ் முஸ்லிம் இங்கு எழுதியுள்ளார், சூரிய நாராயணன் ஒரு சி.ஐ.ஏ ஏஜன்ட் என்று. எவ்வளவு நாட்கள் தான் இப்படிப்பட்ட ஊகங்களைப் பரப்பி, மக்களை முட்டாளாக்குவீர்கள் சகோதரர்களே? ஒவ்வொரு முறை படுபாதகச் செயல்களில் ஈடுபடும் போதும், அதற்குப் பின்னால் யூதச் சதி இருக்கிறது, அவர்கள் தாங்களே குண்டு வைத்துக் கொண்டார்கள், இது கிறித்துவ - அமெரிக்க சதி என்றெல்லாம் வதந்திகளை பரப்பி, பாதகர்களுக்கு வக்காலத்து வாங்காதீர்கள்!"
("அனாணிமஸ்" பெயரில் பின்னூட்டமிட்டவர் முஸ்லிம் என்பதை அவர் மட்டுமே குறிப்பிட்டுள்ளார். தனது வாதத்திற்கு வலு சேர்க்க ஏன் அவரே கூட அனாணிமஸாக எழுதி இருக்கலாம்! ) அனானிமஸ் யாராகவாவது இருந்து விட்டுப் போகட்டும். இதே யூகத்தைச் சொல்லியுள்ள செய்திகளைச் சில தமிழ் ஊடகங்களில் வெளியானவற்றை இங்குக் குறிப்பிட்டாக வேண்டும்.
குமுதம் ரிப்போர்ட்டரில் ( 07-05-2006) "தலையை வெட்டிய தாலிபான்கள்!" என்ற கட்டுரையில்,
"சூரியநாராயணாவை ஓர் அறையில் அடைத்து வைத்திருந்தோம். அவர் காவலாளியைத் தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றார். அப்போது அவரைச் சுட்டுவிட்டோம் '' என்று தாலிபான் சார்பாக பேசிய ஒருவர் கூறினாலும் சூரியநாராயணாவின் தலையை வெட்டியது யார் என்பதற்கோ, அவர் உடலில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தற்கான அறிகுறியே இல்லை என்பதற்கோ விளக்கங்கள் இல்லை.
ஏன் இந்தியர்களைக் குறிவைத்து 'எல்லோரும் வெளியேறுங்கள் ' என்று தாலிபான் தீவிரவாதிகள் சொல்கிறார்கள்? இதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களை ஓடஓட விரட்டி அவர்களின் பிடியிலிருந்து அந்த நாட்டை மீட்ட அமெரிக்காவைப் பழிவாங்கத் தாலிபான்கள் துடிக்கிறார்கள் . அந்நாட்டுடன் இந்தியா நட்பு பாராட்டுவது தாங்க முடியாமல்தான் இந்தியர்களைக் குறிவைக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் போருக்குப் பிறகு அந்நாட்டைச் சீரமைக்க இந்தியா பல்வேறு விதங்களில் உதவி வருகிறது. சுமார் 55 கோடி அமெரிக்க டாலர்கள் பண உதவியும், அங்கே சாலைகளைச் சீரமைப்பது போன்ற பணிகளையும் செய்த இந்தியாதான், அந்நாட்டுக்கே புதிய பாராளுமன்றக் கட்டடத்தையும் கட்டிக் கொடுத்தது . அங்கு ஜாஹிர்ஷா பள்ளிவாசலைச் சீரமைத்து சுமார் 12000 மாணவர்கள் படிக்க வழி செய்தது. சுமார் 8000 பேர் பயன்பெறும் வகையில் இந்திரா காந்தி பெயரில் குழந்தைகள் மருத்துவமனை ஒன்றைக் கட்டிக் கொடுத்தது, 400 பேருந்துகள், தொலைத்தொடர்புத் துறைக்கு சாட்டிலைட்டுகள் என்று நிறைய ஆக்கப்பணிகளை இந்தியா செய்துவருகிறது.
இவ்வளவும் மனிதாபிமானமுறையில் செய்யப்படுவதாகச் சொல்லப் பட்டாலும்,பக்கத்து நாடான பாகிஸ்தானுக்கு செக் வைக்கவே இப்படி இந்தியா செயல்படுகிறது என்ற கருத்தும் உள்ளது. பாகிஸ்தானிலோ தன் நாட்டுக்குள் தீவிரவாதத்தை விதைக்கவே இந்திய அரசு ஆப்கானிஸ்தான் மூலம் முயல்கிறது என்ற எண்ணம் உண்டு . ஆகவே இந்தியாவுக்கு எதிராக தாலிபான்களை மறைமுகமாக பாகிஸ்தானின் உளவு அமைப்பே தூண்டிவிடலாம் என்ற கருத்தும் உள்ளது."
மேலும் ஜூனியர் விகடனில் ( 07-05-2006) "தாலி அறுக்கும் தலிபான்கள்" என்ற கட்டுரையில்,
"இந்தக் கடத்தலின் பின்னணியில் பல்வேறு ஊகங்கள் இருக்கின்றன . இந்தியாவுகு எதிராக உள்ள பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஆப்கான் எல்லையில் உள்ள தலிபான்களுடன் சேர்ந்து நடத்தும் நாடகம் இது என்பது ஒரு யூகம். அடுத்ததாக 'நாட்டை நவீனப்படுத்தினால் அடிப்படைவாதம் தகர்ந்துவிடும் (!) என்ற கொள்கையுடைய தலிபான்கள், நவீனத்துவத்தைக் கொண்டுவரும் இந்தியப் பணியாளர்களைக் குறிவைக்கிறார்கள் என்றும் யூகிக்கப்படுகிறது.
இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான யூகம் 'இந்தியர்கள் பலர் அமெரிக்காவின் கைக்கூலிகளாகப் பணி புரிகிறார்கள். அவர்கள் வந்த வேலையை விட்டுவிட்டு உளவு பார்க்கிறார்கள் ' என்று தாலிபான்கள் உறுதியாக நம்புகிறார்கள் என்பதுதான்.
தலிபான்கள் எப்படியாவது இருந்து விட்டுப் போகட்டும். உயிருக்கு உத்திரவாதமில்லாத நாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்களை நாம் ஏன் திரும்பப் பெறக்கூடாது? என்ற கோஷம் தற்போது வலுப்பெற ஆரம்பித்துள்ளது. ஏனென்றால் சூரிய நாராணயனன் முதல் பலி அல்லர். கடந்த நவம்பர் மாதம் கேரளாவைச் சேர்ந்த மணியப்பன் குட்டி என்பவர் இதே மாதிரி கடத்தப்பட்டுக் கோரமாகக் கொ ல்லள்ளப்பட்டார் . அப்போதும் இந்தியாவிடம் தலிபான்கள் வைத்த கோரிக்கை 'உடனடியாக இந்தியர்கள் வெளியேற வேண்டும் ' என்பதுதான் . இந்த விஷயத்தில் நம் அரசு தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறது.
'தலிபான்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கொள்வது, அவர்களை அங்கீகாரம் செய்வதாக மாறிவிடும்' என அமெரிக்கா நிர்ப்பந்தம் தருவதால்தான் இந்தியா தொடர்ந்து வாய்மூடிக் கிடப்பதாகப் பேச்சுக்கள் கிளம்பி விட்டன . இந்நிலை தொடர்ந்தால் 'பாகிஸ்தானைப்போல அமெரிக்காவின் அடிமையாக மாறிக் கொண்டிருக்கிறது இந்தியா ' என்ற இழிசொல் தவிர்க்க முடியாதாத ஆகி விடும், ஜாக்கிரதை! "
தீவிரவாதத்தை வேதக் கட்டளையிட்டு தீவிரமாக எதிர்ப்பதோடு மட்டுமின்றி அதனால் பாதிக்கப் பட்டவருக்குத் தகுந்த பரிகாரத்தையும் வழங்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டும்தான்! இதைத் தெரிந்தும் இன்னும் ஏன் பிதற்றி வருகிறார்கள் இவர்கள்? சகமனிதனைக் அநியாயமாகக் கொலை செய்பவனை ஷரீஅத் சட்ட ரீதியில் தண்டிக்கச் சொல்லும் போது (பார்க்க குர்ஆன் வசனங்கள் 2:178-179)
வரிந்து கட்டிக் கொண்டுக் கொண்டு குற்றவாளிக்குப் பரிந்து மனிதநேயம் பேசுபவ்ர்களும் ஒருவகையில் மனிதகுல எதிரிகளே ! பாதிக்கப்பட்டவனின் வலியை உணராமல் மேதாவித்தனமாகப் பொதுமன்னிப்பு அறிக்கை விடும் இவர்கள்தாம் உண்மையில் தீவிரவாதிகள்!
5:32 இதன் காரணமாகவே, ' நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான். மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்"
பொறியாளர் சூரிய நாராயணாவின் படுகொலை மட்டுமல்ல , வேறு எந்தப் படுகொலையையாவது ஆதரித்து எழுதிய ஒரேஒரு முஸ்லிம் வலைப்பதிவரைக் காட்டிவிட்டு இவர்கள் ' எரிகிற வீட்டில் பீடிக்கு நெருப்பு பற்ற வைக்கட்டும்!' (நன்றி: ஆசிப் மீரான்) தீவிரவாதத்தை மதக்கட்டளையிட்டு எதிர்க்கும் தத்தம் வேத வரிகளை முன் வைத்து விட்டு நேசகுமார்களும் ஆரோக்கியங்களும் இஸ்லாத்தை விமர்சிக்கட்டும்.
ஒரு வலைப்பதிவர் சொன்னது போல் 'தீவிரவாதிகளுக்கு மதமில்லை' என்பதே உண்மை!