Monday, July 31, 2006

புதைத்தல் Vs. எரித்தல்: ஒரு அறிவியல் பார்வை

இறந்தவர்களைப் புதைப்பதால் இடநெருக்கடி ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் எரிப்பதே சிறந்தது என்று "என்னை புதைப்பதா? எரிப்பதா?" என்ற ஒரு பதிவில் அருமையான விவாதத்தை எழுப்பி இருந்தார்.இதை ஒரு மதப்பிரச்சினையாகப் பார்க்காமல் சமூகக் கண்ணோட்டத்தில் தீர்வு காண வேண்டும் என்றும் வேண்டியிருந்தார். அதில் பெரும்பாலோர் புதைப்பதை விட எரிப்பதே சிறந்தது என்று கருத்துத் தெரிவித்திருந்தார்கள். உண்மையில் எந்த முறை சிறந்தது என்று அலசிப் பார்ப்போம். அதற்கு முன் அ.மார்க்ஸ் எழுதிய 'இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக் கதைகள்' என்ற நூலிலிருந்து:

கேள்வி: நாம் செய்வது எல்லாவற்றிற்கும் எதிராகச் செய்கிறார்களே இஸ்லாமியர்! நாம் இறந்தவர்களை எரித்தால் அவர்கள் புதைக்கிறார்களே?

பதில்: ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான பழக்கங்கள் உள்ளன. இஸ்லாமியர் மட்டுமல்ல. அய்ரோப்பியர், அமெரிக்கர், ரசியர் எனப் பலரும் புதைப்பதையே பழக்கமாக வைத்துள்ளனர். பண்டைய தமிழ்ச் சமூகத்திலும் கூடப் புதைக்கும் பழக்கம் இருந்துள்ளது. மதத் தலைவர்கள் இறக்கும்போது எரிக்காமல் புதைத்து 'அதிஷ்டாணம்' கட்டி வழிபடுவது இந்து மதப் பழக்கம்தான். அறிவியல் ரீதியாய் பார்த்தாலும் கூட எரிப்பதைக் காட்டிலும் புதைப்பதுதான் சரியானது எனச் சுற்றுச் சூழலியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

மனித வரலாற்றில் பிறப்பும் இறப்பும் தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தாலும் சில காலகட்டங்களில் பிறப்பை விட இறப்பு மிகுந்து விடுகின்றது. உதாரணமாகப் போர்கள், விபத்துகள், இயற்கைப் பேரழிவுகள் போன்றவற்றைச் சொல்லலாம். இயற்கையாக நிகழும் இறப்பாக இருந்தாலும் எதிர்பாராத பேரழிவுகளாக இருந்தாலும் உலகம் தோன்றியது முதல் இதுநாள் வரை இறந்த சடலங்களைப் புதைக்க இடமில்லை என்ற இடநெருக்கடி எந்த நாட்டிலும் இருந்ததாகத் தெரியவில்லை. மேலும் உலகில் மனிதன் வாழத் தகுந்த நிலப்பரப்பில் பயன்படுத்தப்படும் நிலப்பகுதி வெகு சொற்பமே எனும்போது மயான இடநெருக்கடி என்பது உலகளாவிய பிரச்சினையன்று .

மேலும் உலகில் மனிதன் மட்டும் இறப்பதில்லை. உயிருள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் மரணம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. இத்தகைய தவிர்க்க முடியாத இயற்கை நிகழ்வில் மரித்தவை மண்ணோடு மக்கிப் போவதும் இயற்கையாக நடந்து கொண்டே இருக்கிறது. ஜீவராசிகளில் மனிதன் மட்டுமே இறந்த உடலை முறையாக எரித்தோ அல்லது புதைத்தோ அடக்கம் செய்கிறான். வனங்களிலும் நீர்நிலைகளிலும் வாழும் உயிரினங்கள் இறந்தபின் மண்ணோடு மண்ணாகக் கலந்து மறைந்து போகின்றன.

மனிதன் பிறந்தது முதல் இறக்கும்வரையிலான வழிகாட்டல்களை இஸ்லாம் வழங்கி உள்ளது. இறந்த சடலங்களைக் குளிப்பாட்டி சுத்தம் செய்து அதற்குரிய இடத்தில் நல்லடக்கம் செய்வது முஸ்லிம்களின் கடமை. இதே போல் யூத, கிறிஸ்தவ மதங்களிலும் எரிப்பதை விடப் புதைப்பதே பின்பற்றப்படுகின்றது. இந்து மதத்தில் எரிப்பதும் புதைப்பதும் நடைமுறையில் உள்ளது. எல்லா மதங்களிலும் பொதுவாக சிறு குழந்தைகளின் சடலங்களைப் புதைப்பது நடைமுறையில் உள்ளது.

இஸ்லாம், இறந்தவர்களின் அடக்கஸ்தலத்தை வெறும் மண்ணறையாகவே கருதுகிறது . இறந்தவர்களின் அடக்கஸ்தலங்களில் சமாதி கட்டுவதையோ அல்லது அலங்கரிப்பதையோ விரும்பவில்லை. ஒரு சிற்றூரில் வாழும் நூற்றுக்கணக்கான, அல்லது ஒரு பேரூரில் வாழும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களுக்கு இரண்டிலிருந்து நான்கு வீடுகள் கட்டிக் கொள்ளக் கூடிய நிலப்பரப்பே சவக்குழிகளுக்காகப் பயன்படுத்தப் படுகிறது. ஓரிடத்திலிருந்து தொடங்கி, ஒரு சுற்று சுற்றி, அதே இடத்திற்கு வந்து சேர ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் ஆகிவிடும்; புதைக்கப் பட்ட உடல்களும் மண்ணோடு மண்ணாகி இருக்கும்.

இவ்வாறு, பல்வேறு காலகட்டங்களில் மரணித்தவர்களை ஒன்றன்மேல் ஒன்றாகப் புதைப்பதால் முஸ்லிம்களின் மண்ணறையகத்தில் இடநெருக்கடிக்கு வாய்ப்பேயில்லை. மேலும் இறந்தவர்களுக்கு சமாதி கட்டுவதை இஸ்லாம் தடுப்பதால், இஸ்லாமிய முறைப்படையான சவ அடக்கத்தில் இடநெருக்கடி அறவே இல்லை.

சுற்றுச் சூழல், சிக்கனம், நடைமுறைச் சாத்தியம் ஆகியக் காரணிகளைக் கொண்டு ஒப்பீடு செய்யும் போதும் எரிப்பதைவிடப் புதைப்பதே சிறந்ததாகும். எப்படியெனில், மனித உடலை எரிக்க நவீன எரிகலன்களும் மின் மயானங்களும் தற்காலத்தில் வந்து விட்டன. இதற்கு முன் இறந்த உடலை எரிக்கும் போது நரம்புகள் முறுக்கிக் கொண்டு எரிந்து கொண்டிருக்கும் சவம் எழுந்து நிற்கும்போது, தடியால் அடித்து மீண்டும் சிதையில் தள்ளுவர். இருக்கும்வரை மதிப்புடன் இருந்த ஒருவரின் சடலம் இறந்தபின் சிதைக்கப்படுவதைக் கண்ணால் காணும் நெருங்கியவர்களின் மனவேதனை இறந்த துக்கத்தை விட அதிகமானதாகும்.

இது ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம் பிணம் எரிப்பதை ஒரு குறிப்பிட்ட சமூகத்தவர் மட்டுமே செய்து வருவதால், அந்தச் சமூகத்தவருடன் (ஒரே மதத்தவராக இருந்தாலும்) பிறர் திருமண உறவு வைத்துக் கொள்வதில்லை. அதேபோல் ஏனைய பொதுநிகழ்வுகளிலும் ஒதுக்கி வைத்தே பார்க்கப்படும் அவல நிலைக்கு ஆளாகின்றனர். அவர்களின் பிள்ளைகள் என்னதான் படித்து கெளரவமான உத்தியோகத்திற்கு வந்தாலும் வெட்டியான் பரம்பரை என்றே இழிவாகப் பார்க்கப்படுகின்றனர்.

இஸ்லாத்தில் பெண் ஜனாஸாக்களை நெருங்கிய உறவினர்கள் சுத்தம் செய்து நல்லடக்கம் செய்ய வேண்டும். மற்றவர்களை சவ அடக்கம் செய்வது ஊர் மக்களின் பொதுவான கடமையாகக் கருதப்படுவதால், குறிப்பிட்ட நபர்களை மட்டும் நம்பியிருக்க வேண்டியது இல்லை. இதன் மூலம் வெட்டியான் என்ற இழிபெயர் நீங்கவும் சமூக நல்லிணக்கத்திற்கும் இஸ்லாமிய முறையிலான சவ அடக்கம் வழிவகுக்கிறது. இறந்தவரை புதைக்கும் வரை நெருங்கியவர்களும் உறவினர்களும் இருந்து நல்லடக்கம் செய்ய முடியும். ஆனால் மனோதிடமும் பயிற்சியும் பெற்றவர்கள் மட்டுமே பிணம் எரிக்க முடியும்.

இறந்தவர் குடும்பத்தினரின் நிதிநிலையைக் கணக்கிட்டால் சடலத்தை எரிப்பதற்கான செலவு, புதைப்பதற்கு ஆகும் செலவை விட அதிகமே. பிணம் நன்றாக எரிவதற்கு சுமார் 1600 முதல் 2000 டிகிரி பாரண்ஹீட் வெப்பம் தேவைப்படும் . இதற்கான கருவிகளின் விலையும் அதிகம் மின்மயானங்கள் கிராமப் பகுதிகளில் இல்லாமல் நகர்ப்புறங்களில்தான் இருக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம் எரியூட்டத் தேவையான மின்சாரம் நகர்ப்புறங்களில் மட்டுமே தடையின்றிக் கிடைக்கும் என்பதும் ஒரு காரணம்.

சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டால் மனித உடல் எரியூட்டப்படுவதால் எழும் புகை மற்றும் மாசுக்களால் சுற்றுப்புறச் சூழல் கெடுகின்றது. புதைப்பதால் நாற்றமெடுத்த சவம் கூட மண்ணுக்குள் அடங்கிவிடும். ஆனால் எரியூட்டப்படுவதால் எழும் நாற்றம் பல மைல் தூரங்கள் வரை காற்றில் பரவி ஆரோக்கியமான காற்றை மாசுபடுத்த வாய்ப்புகள் அதிகம்.

ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் கண்கானிப்பு அமைப்பின் Persistent Organic Pollutants (POP) அறிக்கையின்படி பிணம் எரியூட்டப் படுவதால் கொடிய விஷத்தன்மையுள்ள நைட்ரஜன் ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, அமில மழைக்குக் காரணமான கந்தக டையாக்சைடு ஆகியவை வெளியேறுகின்றன. பிண எரிப்பால் வெளியாகும் டையாக்ஸினின் அளவு 0.2%. உலகின் பெரும்பாலான பகுதிகளில் பிணங்களை புதைப்பதே வழக்கத்தில் உள்ளதால் இந்த அளவு ஓரளவு கட்டுக்குள் இருக்கிறது. ஏற்கனவே தொழிற்சாலை மற்றும் வாகனப்புகையினால் வெளியாகும் நைட்ரஜன் டைஆக்ஸைடு, கந்தக டை ஆக்ஸைடு ஆகியவை சுற்றுச்சூழலை மாசுபடுத்திவரும் போது பிண எரிப்பும் பரவலாக்கப் பட்டால் நிலை இன்னும் மோசமாகி விடும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கருத்தாகும்.

செயற்கைக் கழிவுகள் கட்டுப்பாட்டு வழிகாட்டலின் (Emission Inventory Guidebook) படி பிண எரிப்பினால் வெளியாகும் நச்சுப்பொருட்களில் பாதரசம், ஹைட்ரஜன் ஃப்ளோரைடு (HF), ஹைட்ரஜன் க்ளோரைடு (HCl), NMVOCs, PAHs, Benzo(a)pyrene, benzo(ghi)perylene,Benzo(k)fluoranthene, Fluoranthene, Indendo(123-cd)pyrene, Benzo(b)fluoranthene, Benz(a)anthracene, Dibenz(ah)anthracene, PCBs (Nos. 126, 169, 77, 118, 105, 123, 114, 156, 157,167, 189), Hexachlorobenzene, Toxaphene , Chlordane, Aldrin, DDT, Mirex , Dieldrin, Endrin, Hexabromobiphenyl, Pentachlorophenol, Heptachlor , Chlordecone, Short Chain Chlorinated Paraffins (SCCP), Lindane ஆகியவை அடங்கும்.

போர்களின் போதும் பேரழிவுகளின் போதும் இறந்த உடல்களை எரிப்பதை விடப் புதைப்பதே நடைமுறையில் இருந்து வருகிறது.இதுவே சுற்றுசூழலுக்கும் உகந்தது. சமீபத்திய சுனாமியின் போது குவியல் குவியலாகப் பிணங்கள் புதைக்கப்பட்டன. இவ்வாறான நெருக்கடியான சமயங்களில் சடலங்களை எரிப்பதை விடப் புதைப்பதே உகந்ததாக இருக்கின்றது.

இறந்தவரை அடையாளம் காணுதல், தடயவியல் பரிசோதனை ஆகியவற்றிக்குத் தேவைப் பட்டால் புதைக்கப்பட்ட பிணங்களைத் தோண்டியெடுக்க முடியும். ஆனால் சடலம் எரிக்கப் பட்டிருந்தால் இதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போகின்றன. ஆக, நடைமுறைச் சாத்தியம், சிக்கனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக-மத ரீதியான காரணங்களாலும் சடலத்தை புதைப்பது, எரிப்பதை விடச் சிறந்தது என்பது தெளிவாகிறது.

இப்பதிவுக்கான குறிப்புகள் 1) EMEP/CORINAIR Atmospheric Emission Inventory Guidebook -3rd edition October 2002 UPDATE -Technical report # 30 – Incineration of Human Bodies மற்றும் 2) www.answers.com இலிருந்து எடுக்கப்பட்டது.

Wednesday, July 26, 2006

முத்தமிழ் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு (பகுதி-4)

நாகூர் தமிழ் புலவர்களின் தலைமைப் புலவர் வா. குலாம் காதிறு நாவலர் மலேயா (இன்றைய மலேசியா) திருநாட்டின் அழகு நகர் பினாங்கில் இதழாசிரியராக புகழ் குவித்தார். 'வித்தியா விசாரிணி' என்னும் பெயரில் இதழ் நடத்திய காலம் 1888 ஆம் ஆண்டு. தொட்ட துறை அனைத்திலும் துலங்கிய திறன், ஆழ்ந்த புலமையின் வெளிப்பாடு மெச்சத்தக்க வகையில் இருந்தமையால் குலாம் காதிறு புகழ் முகட்டில் வாழ்ந்து 28.1.1908ல் மரணித்தது தமிழ் கூறு நல்லுலகு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

அடுத்த நிலையில் வைத்து எண்ணத்தக்க, ஏற்றமிகு புலவர் பிச்சை நயினார் மகன் பாவகை வல்ல கல்விக் களஞ்சியம் முகம்மதுப் புலவர். இவர் இலக்கிய உலகில் 'ஊஞ்சல் பாட்டு' புகழ் புலவராக பேசப்படுபவர். அவருடைய பிற ஆக்கங்களாகக் குறித்து வைத்துள்ள விவரப்படி

(1) 'கேசாதி பாத மாலை'
(2) 'முகியித்தீன் புராணம் ' ஆகிய இரண்டு நூல்கள் மட்டும். ஆனால், முகம்மதுப் புலவரின் இலக்கியப் பணி அத்துடன் நின்றிடவில்லை. அவர் ஆற்றிய பணி விரிவானது. அழகும் ஆழமும் கொண்டது. அவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்க ஒன்று.

(3) புதூகுச்சாம்மென்னும் வசன காவியம். 1879 ஆம் ஆண்டு காரை முஹம்மது மைதானி அச்சகத்தில் அச்சிடப்பட்டது. மற்றொன்று

(4) நாகூர் கலறத் மீரான் சாகிபு ஆண்டவர்கள் பேரில் 'பிள்ளைத் தமிழ்' ஹிஜ்ரி 1291 அச்சில் வந்தது. நாகூரார் பேரில் வந்துள்ள பிள்ளைத்தமிழ் நூல்களின் எண்ணிக்கை இதனைச் சேர்த்து எட்டு. இனிக்கும் தமிழ் இலக்கியங்களில் இது ஒன்று.

நாகூர் புலவர்களுள் சிறப்புக்குரிய மற்றொருவர் கி. அவு.செவத்த மரைக்காயர். இவருடைய ஆக்கங்களில் (1) 'மும்மணிக் கோவை' (2) 'உயிர் வருக்கக் கோவை' ஆகிய நூல்கள் ஹிஜ்ரி ஆண்டு 1311ல் காரைக்கால் இந்தியக் காவலன் அச்சியந்திர சாலையில் அச்சிடப்பட்டவை. 'வருக்கக் கோவை ' காரைக்காலில் அடங்கியுள்ள இறைநேசச் செல்வர், ஆரிபுல்லா காமில், ஹலரத் மஸ்தான் சாஹிபு அவர்கள் பெயரால் அமைந்த பாடல்கள் நிரம்பியது.

மற்ற நூல்களில் பார்வையை கூர்மையாக்கும் வகையில் அமைந்த 'பயணக் கவிதை' நூல் அதுவும் கடல் கடந்த நாட்டில் அச்சிட்ட நூல் 'மலாக்காப் பிரதேசத் திரட்டு'. இன்றைய மலேஷியவின் பெருநகர்களில் ஒன்றான 'மலாக்கா'வை அடுத்துள்ள 'புலாவ் பெஸார்' தீவில் அடங்கியுள்ள இறைநேசச் செல்வர், ஹலரத் செய்குணா, செய்கு இஸ்மாயில் அவர்களின் 'ஜியாரத்' முடித்து வந்த பயணம் பற்றிய நூல்.

ஹலரத் செய்கு இஸ்மாயீல் வலியுல்லா அவர்களின் அருட்சிறப்பு விரவி உள்ளது. அத்துடன் புலவர் பாடிய 'இரத பந்தம்' 'அட்டநாக பந்தம்' ' இரட்டை நாக பந்தம்', 'கமல பந்தம்' ,'சித்திரக் கவி' ஆகியவை இடம் பெற்றுள்ளது.

நாகப்பட்டினம் கஞ்சஸவாய் பிரஸில் ஹிஜ்ரி 1321 ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட ' கந்தூரி திருவலங்காரச் சிந்து அலங்காரக் கும்மி' என்னும் நூலும் கி.அவு. செவத்த மரைக்காயர் ஆக்கமேயாகும். நாகப்பட்டினத்திற்கும், வேளாங்கண்ணிக்கும் இடையிலுள்ள பாப்பாவூரில் அடங்கியுள்ள இறைநேசச் செல்வர், ஹலரத் ஸையிதினா ஹாஜா செய்யிது அலாவுத்தீன் அவர்களின் பேரில் திருவிழா திருவலங்காரச் சிந்து, நாகப்பட்டினத்தில் அடங்கியுள்ள ஹலரத் ஸையிதினா சைய்யிது இபுனு மஸ்ஊத் அவர்களின் பேரில் இன்னிசை ஆகியவை உள்ளடங்கிய அழகிய படைப்பு.

அவரது மற்றொரு நூல் சென்னை திருவல்லிக்கேணியில் அடங்கியுள்ள ஹலறத் செய்குனா செய்குல் மஷாயிகு செய்கு அப்துல் காதிறு சாகிபு ஆரிபு அவர்கள் பேரில் சரமாசிரிய விருத்தம். கலித்துறை இன்னிசை பதங்கள் கொண்ட நூல் 'பதங்கள்' என்னும் நூலுருவில் வெளிவந்தது. கரைக்கால் முகம்மது சமதானி அச்சகத்தில் 1896 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது.

ஒரே காலத்தில் மூன்று புலவர்கள் செவத்த மரைக்காயர் என்ற பெயருடன் வாழ்ந்திருக்கின்றார்கள். மூவரும் புலவை மிக்க மும்மணிகளாகத் திகழ்ந்திருக்கின்றார்கள். அவர்களுள் அ .தம்பி சாகிபு மரைக்காயர் மகன் த.செவத்த மரைக்காயர் சீரியர். இவர் நூலாசிரியர் இதழாசிரியர் ஆக இனிய இலக்கியப் பணி புரிந்தவர். அவர் வெளிக் கொணர்ந்த இதழ் 'சீரிய சூரியன்'. நாகூர் புலவர்களிடையே நிலவிய கருத்து வேறுபாடுகளை வெளி உலகுக்கு எடுத்துக் கூறும் வகையில் இதன் பணி தொடர்ந்தது. முன்னோடி இதழ்களில் இது ஒன்று.

த. செவத்த மரைக்காயர் சீரியரின் புலமைக்குச் சான்று கூறும் அவரது 'திருமக்காக் கோவை, மக்கா நகரின் சிறப்பு, மாநபி நாதர்(ஸல்) அவர்களின் மாண்பு விரித்துரைக்கும் அகப் பொருள் பாடல் 437 கொண்டது. அவருடைய தலையாய இலக்கியப் பணியாக இதனைக் குறிப்பிட வேண்டும்.

திருமக்காக் கோவையின் உள்பக்கத்தில் காணப்படும் குறிப்பை அவரது மற்ற நூல்கள் பற்றிய விவரமாக எடுத்துக் கொள்ளலாம். அவை

(1) 'தர்காக் கோவை'

(2)'ஜைலான் மும்மணிக் கோவை'

(3)'பகுதாதுக் கலம்பகம்'

(4)' ஆரிபு பிள்ளைத் தமிழ்

(5) ' பார்ப்பாரூர் யமக நூற்றந்தாதி'

(6) ' தந்தையந்தாதி'

(7) 'மாணிக்கபூர் மாணிக்க மாலை'

(8) 'கீர்த்தனாச் சாரம்'

9) 'குருமணி மாலை'

(10) 'திருப்பா'

(11) பதஉரை , பொழிப்புரை விரிவுரையுடன் கூடிய 'குத்பு நாயகம்'

(12) 'மெஞ்ஞானத் தீர்மானம்' ஆகிய பனிரெண்டு. இவற்றுள் 'பகுதாதுக் கலம்பகம்' அச்சிடப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இப்பட்டியலில் குறிப்பிடாத ஒன்றான 'திருமணிமாலை வசனம் பார்க்க்க விசனம் ' என்னும் சிறுநூலும் வெளிவந்துள்ளது. (மற்றவை அனைத்தும் அச்சில் வந்தனவா என்பதுவும் அப்படி அச்சிடப்பட்டிருந்தால் எப்போது வந்தது என்பதும் தெரியவில்லை. அத்தனையும் அச்சில் வந்திருப்பின் நாகூர்ப் புலவர்களில் குலாம் காதிறு நாவலருக்கு அடுத்த நிலையில் வருபவர் த . செவத்த மரைக்காயர் ஆவார்.)

முஸ்லீம் தமிழ்ப் புலவர்களில் முத்தமிழ் வித்தகர் நெ.மதாறு சாகிபு மகன் பெரும்புலவர் முகம்மது நயினா மரைக்காயர் எனலாம். அவருக்குப் புகழ் சேர்த்த இலக்கியப் படைப்புகள்

(1) 'தேவார மஞ்சரி'

(2) 'புகழ்ப்பா மஞ்சரி'

(3) ' கீர்த்தன மஞ்சரி' ஆகியவை.

அவரது ஆழ்ந்த தமிழறிவுக்கும், புலமை செறிவுக்கும் இசைஞானத்திற்கும் பதச் சோறாக 'லால் கௌஹர் ' நாடகத்தைக் கூறலாம். இவ்வட்டாரப் பேரூர்களில் மேடை நாடகமாக நடிக்கப்பட்டுச் சிறப்பு சேர்த்தது. நாடக நூலினை வா.குலாம் காதிறு நாவலர் பதிப்பித்தார். முதற்பதிப்பு காரைக்கால் முகம்மது சமதானி அச்சகத்திலும் இரண்டாம் பதிப்பு 1901ல் சென்னை இட்டா பார்த்தசாரதி அச்சுக் கூடத்திலும் அச்சிடப்பட்டது.

1990 டிசம்பர் திங்கள் கீழக்கரையில் சீரோடும் சிறப்போடும் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டை ஒட்டி 'லால் கௌஹர்' நாடகம் மூன்றாம் ப்திப்பு வெளியிடப்பட்டது. பதிப்பித்தவர் பேராசிரியர் டாக்டர் சே.மு .முஹம்மது அலீ. வெளியீடு சென்னை சுலைமான் ஆலிம் அறக் கட்டளை.

பெரும்புலவர் முகம்மது நயினா மரைக்காயர் வண்ணம், இன்னிசை, சித்திரக் கவிகள் பாடியுள்ளார் . அத்துடன் அன்றைய வணிகர்களுக்குப் பயன்தரக்கூடிய வாணிப குறியீட்டு நூலாக 'நெயினாஸ் கோட்' வழங்கி அன்றைய தேவையை நிறைவேற்றியுள்ளார் . குலாம் காதிறு நாவலர் படைப்புகளில் ஒன்றான 'சமுத்திர மாலை' முகம்மது நெயினா மரைக்காயரை பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்டதாகும். சிலேடையிலான பாடல்கள் நிறைந்தது.

மூவர் வினா -விடை முறையில் பேசுவது போல் அமைந்த, இறை புகழ்ப்பாக்கள் நிறைந்த நூல் ஒன்று உண்டு. அதன் பெயர் 'மூவர் அம்மானை'. நூலாசிரியர் பெயர் மீறா லெப்பை மரைக்காயர் மகன் அல்லி மரைக்காயர். 'மூவர் அம்மானை' 1873ஆம் ஆண்டிலும் இரண்டாம் பதிப்பு 1876 ஆம் ஆண்டிலும் முன்றாம் பதிப்பு 1878ஆம் ஆண்டிலும் வெளிவந்துள்ளது . அந்நாளில் மூன்று பதிப்புகள் வெளியிடப்பட்ட நூல் இது ஒன்றே. அதற்கு மக்களிடையே இருந்த வரவேற்பை உணர்த்துகிறது.

மீ.அல்லி மரைக்காயர் இயற்றிய மற்ற நூல்கள் வருமாறு.

(1) ' பிரபந்தக் கொத்து'

(2) முகைதீன் அப்துல் காதிர் ஆண்டவர் பேரில் 'பதிற்றுப்பத்தந்தாதி'

(3) 'முனாஜாத்து'

(4) ' நெஞ்சறிவுத்தல்'

(5) 'அன்னம் விடு தூது '

(6) வண்டு விடு தூது .

பெரும்பாலும் நூல்கள் பதினொன்று பாடல்கள் கொண்டது. அனைத்தும் கட்டளைக் கலித்துறை பாடல்களாக அமைந்தவை . இவற்றை 1878ல் நாவலர் குலாம் காதிறு பதிப்பித்துள்ளார். நூல்கள் கலாரத்னாகர அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டவை. 'நெஞ்சறிவுத்தல்' மார்க்க அறிவுரை கூறும் ஐந்து பாடல்களைக் கொண்டது.

செய்கு சுல்தான் சாகிபு மரைக்காயர் மகன் குலாம் முகம்மது சாகிபு மரைக்காயர்

(1) 'ஹக்குப் பேரிற் பதிகம்'

(2) 'நபியுல்லா பேரிற்பதிகம்', 'இமாம் ஹுசைன், இமாம் ஹஸன், முஹ்யித்தீன் ஆண்டகைகள் ஆகியோர் பேரிற் பதிகம்' பாடியுள்ளார். அவை

(3) 'துதிப்பாத் திரட்டு ' என்னும் பெயரில் நூலுறு பெற்று 1876ஆம் ஆண்டு வெளிவந்தது. க.பகீர் முகியித்தீன் நாகூர் ஆண்டகை அவர்களின் சிறப்பையும் தர்காஷரீபின் சீரையும் 44 பாடல்களின் வடித்துள்ளார். 1876ஆம் ஆண்டு பதிக்கப்பட்ட அந்நூலின் பெயர் 'நான்மணி மாலை'. இபுறாஹிம் லெப்பை மரைக்காயர் மகன் இ.கிதுறு முகம்மது மரைக்காயர் 'குதுபு' சதகம் பாடியுள்ளார் . இது 1893ல் அச்சிடப்பட்டது. ப. கலிபா சாகிபு மகன்�பகீர் முகியித்தீனின் 'கீர்த்தனா மாலிகை' 1886ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

1895ஆம் ஆண்டு மலேஷியா 'பினாங்கு' நகர் கிம் சேய்க் ஹியான் அச்சியந்திர சாலையில் அச்சிடப்பட்ட நூல் ' பினாங்கு உற்சவ திருவலங்காரச்சிந்து'. நூலாசிரியர் நாகூர் கோ. முகம்மது நைனா மரைக்காயர் மகன் கோசா மரைக்காயர். இவர் இயற்றிய நூல்கள் எட்டு. இவற்றுள் நாடகங்கள் நான்கு. முறையே

(1) சதானந்த மாலை

(2) மனோரஞ்சித சஞ்சீவி என்னுமோர் அற்புத கிஸ்ஸா

(3) திருக்காரைத் திருவிழாச் சிந்து

(4) வைத்திய மகுடம்

(5) சராரே இஷ்க் நாடகம்

(6) ஷிரீன் பரஹாத் நாடகம்

(7) ஜூஹுரா முஸ்திரி நாடகம்

(8) லைலா மஜ்னூன் நாடகம். (இவை அச்சில் வந்த காலம், பதிக்கப்பட்ட அச்சகம் பற்றிய விவரம் தெரியவில்லை.)

முத்தமிழ் வித்தகர் நெயினா மரைக்காயரின் 'லால் கௌஹர்' நாடக நூலை அடுத்து வந்ததும் , அடுத்த நிலையில் வைத்து எண்ணத் தக்கதுமான நூல் 'அப்பாசு நாடகம்' ஆகும். நாகூர் , நாகப்பட்டினம், பினாங்கு, சிங்கப்பூர் , சிங்கப்பூர் ஆகிய ஊர்களில் வழங்கிய வர்ண மெட்டுப் பாட்டுக்களின் இராகங்களில் அமைந்த நாடகத்தை இயற்றியவர் பகீர் முகியித்தீன் மகன் வாஞ்சூர் பகீர்.அப்பாசு நாடகம் 1892ல் அச்சேறியது. ஆங்காங்கே நடிக்கப்பட்டு பரவலான புகழ் ஈட்டியது.

மு. ஆக்கீன் சாகிபு மரைக்காயர் மகன் மு.ஆ. முகையித்தீன் அப்துல் காதிறுப் புலவர் இயற்றிய 'நபியுல்லா பேரில் துவாதசக் கலித்துறை சந்தக் கும்மி' நாகை ஸ்காட்டிஸ் பிராஞ்சு அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டது . காலம் 1879ஆம் ஆண்டு. அவரது மற்றொரு நூல் 'சங்கீத கீர்த்தனா மாலிகை' சிங்கப்பூர் தீனோதய வேந்திர சாலையில் 1916 ஆம் ஆண்டு அச்சேறியது. பிறிதொரு நூல் 'நாகூர் யூசுபிய்யா மாலை 1918ஆம் ஆண்டு நாகை நீலலோசனி அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டுள்ளது.

யூ. சின்னத்தம்பி மரைக்காயரின் மகன் யூ .சி.பக்கீர் மஸ்தான் ஆக்கங்கள் மூன்று. அவை முறையே 'திருத் தோத்திர கீர்த்தனம் ' 1`912ல் ரங்கூன்(பர்மா) ஸ்ரீ ராமர் அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டது. 'கீர்த்தனா மஞ்சரி ' 1916ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. நாகை நீல லோசனி அச்சகத்தில் அச்சிடப்பட்டது. அதே ஆண்டில் வெளியிடப்பட்ட 'திருப்புகழ்' என்னும் தலைப்பிலான நூலில் இருப்பவை நாகூர் ஆண்டகை அவர்களின் பெயராலியற்றப்பட்ட நவீனாலங்கார ஜாவளிப்பதங்கள் சந்தக்கவிகள்.

1933ஆம் ஆண்டு சிங்கப்பூர் கலோனியல் பிரிண்டிங் பிரஸில் அச்சிடப்பட்ட 'முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் சர்வலோக சற்குருநாதர்' , 1934ஆம் ஆண்டு சிங்கப்பூர் செயிண்ட் மேரீஸ் பிரஸில் அச்சிடப்பட்ட 'முஹம்மத் நபி( ஸல்) அவர்கள் கடைந்தேற்றும் வள்ளல்' , 1935ஆம் ஆண்டு நாகூர் ஆண்டவர் பிரஸில் அச்சிடப்பட்ட 'முஹம்மத் நபி(ஸல்) ( இன்ஸான் காமில்) நிறைந்த புருசர் ' ஆகிய மூன்று நூல்களின் ஆசிரியர் சி. ஹாஜி சிக்கந்தர்.

சு. அஹமது இபுறாஹிம் மரைக்காயர் ஆலிம் மகன் S.A. எஹ்யா மரைக்காயர் இயற்றிய 'அரும் பொருட்பா வைங்கவி' 1940 ல் வெளிவந்தது. நாகூர் ஆண்டவர் பிரஸில் அச்சிடப்பட்ட இந்நூலில் முஹம்மது அலி ஜின்னாவைப் பற்றிய பாடல்கள் இடம் பெற்றுள்ளது.

சி.சி. அப்துர் ரஜ்ஜாக்கு (காதிரி) இயற்றிய நூல் 'நூறுல் ஹகாயிகு என்னும் அந்தரங்கச் சோதி ' மதுரை நூருல் ஹக் பிரஸில் 1956ஆம் ஆண்டு அச்சேறியது.

அண்மைய கடந்த காலத்தில் வாழ்ந்து மறைந்த தமிழ் முஸ்லீம் புலவர்களில் நாடறிந்த புலவர் வா.முஹம்மது ஹுசைன் சாஹிப் மகன் மு .ஜைனுல் ஆபிதீன். பின்னாளில் இவர் 'புலவர் ஆபிதீன்' என்றழைக்கப்பட்டு அறியப்பட்டவரானார். ஏறத்தாழ 4000 க்கு மேற்பட்ட இசைப்பாடல்கள், மரபுக்கவிதைகள் 13 நூல்களாக வெளிவந்துள்ளன. அவற்றுள் நமது கவனத்திற்கு வந்தவை

(1) 'நவநீத கீதம்' (1934),

(2) 'தேன்கூடு (1943-இலங்கை),

(3) 'அழகின் முன் அறிவு' (1960-சென்னை).

அதே ஆண்டில் வெளிவந்த இரு நூல்கள் (1) 'முஸ்லீம் லீக் பாடல்கள்',

(2) 'இஸ்லாமியப் பாடல்கள்'.

அவர் இயற்றிய பல பாடல்கள் இன்றும் இசைத் தட்டுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

நன்றி:
முத்தமிழ் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு தொடரும்....

Tuesday, July 25, 2006

உலக வக்கிரப் போட்டி 2006

உலக அழகிப்போட்டி என்ற பெயரில் கன்னிப் பெண்களை துகிலுறியச் செய்து வக்கிர ஆண்களுக்கு மத்தியில் பூனை நடை நடக்கவிட்டு, கலந்து கொண்ட பெண்களில் ஒரு சிலரை மட்டும் ஒவ்வொரு பிரிவில் அழகிகள் என்று தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

முந்தானை முடிச்சு படத்தில் பாக்கியராஜ் கற்பில் சிறந்தவள் கண்ணகியா? மாதவியா? என்று கிராமத்து ஆண்களிடம் கேட்பார். எல்லோரும் கண்ணகி என்பார்கள். உடனே அவர் அங்கிருக்கும் கிராமப் பெண்களிடம், 'உங்கள் கணவர்கள் உங்களை கற்பில் சிறந்தவர்கள் அல்லர்' என்கிறார்கள் என்றதும் மனைவிமார்கள் தத்தம் கணவர்களை அடிக்க விரட்டுவார்கள்!

இதே கண்ணோட்டத்தில் உலக அழகிகள் பற்றிய கேள்வியையும் கேட்டுப் பார்த்தால், உலக அழகிப் போட்டி என்ற பெயரில் நம் வீட்டுப் பெண்களை இழிவு படுத்துவது புரியும்.

இயற்கைப் பேரழிவுகள், போர்கள், குண்டு வெடிப்புகள் என்று மனிதர்கள் அநியாயமாக கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் இச்சூழலில் உலக அழகிப் போட்டிகள் என்ற பெயரில் கன்னிப்பெண்களின் அந்தரங்க அழகை மேடை போட்டு காட்டும் இவர்களை என்னவென்று சொல்வது?



உலக அழகிப் போட்டியின் தாக்கம் கட்டுப்பாடுகளுக்கு பெயர்போன ஈரானிலும் இருந்திருக்கிறது. இஸ்லாமிய உடையணிந்து பெண்களை வலம் வரச் செய்து அழகிப்போட்டி நடத்தியுள்ளார்கள். அழகிப் போட்டிகளை நடத்துபவர்கள் அழகுக்கு என்ன அளவுகோல் வைத்திருக்கிறார்கள் என்று ஒன்றுமே புரியவில்லை.

உலக அழகியை மனைவியா(க்)க நினைப்பதை விட, தன் மனைவியே உலக அழகி என்று நினைப்பவனே நேர்மையான ஆண்மகன்!

Sunday, July 23, 2006

இவற்றிற்கும் இஸ்லாம்தான் காரணமா?

கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் சில குறிப்பிட்ட வகை உடைகளையே அணிந்திருக்க வேண்டும். எல்லாப் பெண்களும் ஆண்களும் பல்கலைக் கழத்தில் பட்டம் பெறும் போது பர்தாவையொத்த கருப்பு அங்கியையும் தொப்பியையும் அணிய வேண்டும். அதேபோல் நீதிமன்ற நீதிபதி (ஆணோ பெண்ணோ) யாராக இருந்தாலும் பர்தாவையொத்த கருப்பு அங்கியை அணிய வேண்டும். இங்கெல்லாம் 'வற்புறுத்தல்' 'பழமைவாதம்' 'பெண் அடிமைத் தனம்' என்ற சொற்கள் பிரயோகிக்கப்படுவதில்லை. ஆனால் முஸ்லிம் பெண்கள் பர்தா அணியும் போது மட்டும் அவ்வாறு குறிப்பிடப்படுவது ஏன்? அதைச் சொல்வது இஸ்லாம் என்பதனாலா?

ஏழ்மையையும் வறுமையையும் ஒழிக்க உலக நாடுகள் திட்டமிடுகின்றன. பொருட்களின் வீண் விரயம் தவிர்க்கப்பட்டு உழைப்பிற்கேற்ற கூலியைக் கொடுத்தால் ஓரளவு வருமை குறையும். செல்வந்தர்கள் கட்டாயமாக வரி செலுத்தினால் அரசின் நிதியாதாரம் கனிசமாக உயரும். அனைத்து வகை வட்டிமுறையையும் தடை செய்தால் ஏழைகள் நிம்மதியடைவர். இதைச் செய்தால் உலகநாடுகள் ஓரளவு பொருளாதார தன்னிறைவு அடையும். ஆனால் உலக நாடுகள் செயல்படுத்த முன்வருவதில்லை ஏன்? அதைச் சொல்வது இஸ்லாம் என்பதனாலா?

முறையற்ற உடலுறவே எயிட்சுக்குக் காரணம்! பாலினக் கவர்ச்சியே பல குற்றங்களுக்கு அடிப்படை. முறையான திருமணங்கள் மூலம் உடலுறவு கொள்வதால் எயிட்ஸ் வர வாய்ப்பில்லை. ஆணும் பெண்ணும் கண்ணியமாக நடந்து கொண்டால் பாலினக் கவர்ச்சியால் எழும் குற்றங்கள் குறையும். ஆணும் பெண்ணும் கண்ணியமாக வாழ்ந்தால் மேற்கண்ட தீங்குகள் இல்லை.ஆனால் உலக நாடுகளின் சட்டங்கள் இவற்றை நடைமுறைப் படுத்த முன்வருவதில்லை ஏன்? அதைச் சொல்வது இஸ்லாம் என்பதனாலா?

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியின் கடைசி நேரத்தில் இத்தாலி கால்பந்தாட்ட வீரர் மாட்டரஸ்ஸியை தலையால் முட்டியதற்காக பிரான்ஸ் கால்பந்தாட்ட வீரரும் அணித்தலைவருமான ஜைன்தீன் ஜெய்டானுக்கு சிகப்பு அட்டை வழங்கப்பட்டு ஆடுகளத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதோடு, அடுத்த மூன்று ஆட்டங்களில் பங்கேற்க FIFA தடை விதித்துள்ளனர். அதேபோல் மாட்டரஸ்ஸிக்கு இரண்டு ஆட்டத்தில் விளையாட மட்டுமே தடை விதிக்கப்பட்டது. தன்மானம் தாக்கப்பட்டதால் உணர்ச்சி வசப்பட்டு தாக்கியவருக்கு மூன்று ஆட்டங்களும், உணர்ச்சி வசப்பட வைத்தவருக்கு இரண்டு ஆட்டங்களும் தடை! அபராதமும் ஜைடானை விடக் குறைவே! ஏன் இந்த பாகுபாடு? அவ்வாறு செய்தவர் முஸ்லிம் என்பதனாலா?

பாகிஸ்தானில் கோவில் இடிக்கப்பட்டால் கொதிந்து எழுவதும், இடிக்கப் படாத கோவில் புணரமைப்பிற்கு நிதியுதவி செய்தாலும் அதற்கும் உள்ளர்த்தம் கற்பிகப் படுகிறது. பாபர் மசூதியை அநியாயமாக இடித்து விட்டு, தற்போது அங்கு சட்டவிரோதமாக அமைக்கப் பட்டுள்ள ராமர் கோவிலுக்கு எஃகுச்சுவர் பாதுகாப்பிற்காக மத்திய அரசு சுமார் எட்டு கோடி ரூபாய் ஒதுக்குகிறது. இடிக்கப்படாத கோவிலுக்காக வெகுண்டு எழுந்த கணவான்கள், இடிக்கப்பட்ட மசூதி பற்றி ஒன்றும் சொல்லாதது ஏன்? அது முஸ்லிம்களுக்குச் சொந்தமானது என்பதனாலா?

டெல்லியில் தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட மசூதிகளில் முஸ்லிம்கள் வழிபாடு நடத்த அனுமதியில்லை. அதே தொல்பொருள் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருவண்ணாமலைக் கோவிலில் இந்துக்கள் வழிபாடு நடத்த முடிகிறது. ஒரே துறையின் கீழுள்ள இரு வேறு வழிபாட்டுத்தளங்களில் ஒன்றிற்கு தடை; மற்றொன்றிற்கு அனுமதி! ஏன்? டெல்லியிலுள்ள வழிபாட்டுத் தளங்கள் முஸ்லிம்களுக்குச் சொந்தமானவை என்பதனாலா?

குண்டு வெடிப்புகளாலும் கலவரங்களாலும் அப்பாவிகள் கொல்லப் படுகின்றனர். சமீபத்தில் கூட மும்பை இரயில் குண்டு வெடிப்புகளில் கொல்லப்பட்டவர்கள் அப்பாவிகளே. இதனை பல வலைப்பதிவர்கள் கண்டித்தனர். அதேசமயம் இஸ்ரேலில் அடாவடித்தனத்தால் லெபனானிலும் அப்பாவிகள் கொல்லப் படுகின்றனர். மும்பை ரயில்களில் குண்டு வைத்தவர்களைக் கண்டித்த மனிதாபிமானிகள், இஸ்ரேலிலிருந்து லெபனானை நோக்கி சரமாரியாக வீசப்படும் குண்டு வீச்சுகளைக் கண்டிக்கவில்லை! ஏன்? கொல்லப்படுவது எங்கோ இருக்கும் முஸ்லிம்கள்தானே என்பதனாலா?

மும்பை ரயில் குண்டு வெடிப்பில் காயம் பட்டவர்களுக்கு தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது உதவியவர்கள் மும்பை ப்ளாட்பார முஸ்லிம்கள். காயம் பட்ட இந்து சகோதரர்களுக்கு இரத்தம் கொடுக்க மருத்துவமணைகளில் நீண்ட வரிசையில் நின்றவர்களும் முஸ்லிம்களே! முதல் கட்ட விசாரணை அறிக்கை வெளிவரும் முன்பே குண்டு வைத்தவர்கள் முஸ்லிம்கள்தான் என்று கண்ணை மூடிக் கொண்டு குற்றப்பத்திரிக்கை வாசித்தவர்கள், மும்பை ப்ளாட்பாரவாசிகளின் சகோதர மனப்பான்மையை மறந்து விட்டனர். ஏன்? அவ்வாறு உதவியவர்கள் முஸ்லிம்கள் என்பதனாலா?

'கால்கேரி' XXXX, 'இஸ்ரேல்' XXXX என்று தன்னை அந்நாடுகளின் பெயரால் அடையாளப்படுத்திக் கொள்கின்றனர் சிலர். பாலஸ்தீன முஸ்லிம்களைக் கொல்வதைத் தவிர வேறுபணியறியாத இஸ்ரேலை நேசித்து நான் 'ஒரு இஸ்ரேலிய ஆதரவாளன்' என்றும் கூட பெருமையாகவும் சொல்லிக் கொள்கின்றனர். ஒன்றுக்கும் உதவாத கிரிக்கெட் விளையாட்டில் பாகிஸ்தானை ஆதரித்தால் அதற்கு தப்பர்த்தம் கற்பிக்கப்படுகிறது! ஏன்? இதனைச் செய்பவர்கள் முஸ்லிம்கள் என்பதனாலா?

Wednesday, July 19, 2006

முத்தமிழ் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு (பகுதி-3)

முத்தமிழில் முதலாவதான இயற்றமிழ் வளர்ச்சிக்குப் பங்களிப்பு செய்த தமிழ் முஸ்லிம்களில் சிலரைப் பற்றி முந்தைய பதிவுகளில் பார்த்தோம். இனி, நாகூர் தமிழ் புலவர்களின் இலக்கியப் படைப்புகள் பற்றியும் பார்ப்போம் .

வா. குலாம் காதிறு நாவலரின் படைப்பு இலக்கியங்களின் பட்டியல் இப்படி விரிகிறது:

1. பிரபந்தத் திரட்டு - சச்சிதானந்தன் பதிகம், இரட்டை மணிமாலை , முனாஜாத்து, திருநாகை யமகபதிற்றந்தாதி, நாகைப் பதிகம், முனாஜாத்து ஆகியவை அடங்கிய அழகிய கவிதைகளின் கோவை ஹிஜ்ரி 1292ஆம் ஆண்டு காரைக்கால் முகம்மது ஸமதானி அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டது .

2. 'நாகூர்க்கலம்பகம்' நாகூர் ஆண்டகை ஹலரத் மீரான் சாஹிபு அவர்கள் சிறப்பு விவரிப்பது. கி.பி. 1878ல் வெளிவந்தது.

3.'முகாசபா மாலை' நாகூர் நாயகம் அவர்களின் கனவில் நிகழ்ந்த( தாகச் சொல்லப்படும்) விண்ணேற்ற நிகழ்ச்சிகள் குறித்த குறுங்காவியம். 13 படலங்கள் 300 பாடல்கள் கொண்டது. முதற்பதிப்பு 1899 ஆம் ஆண்டு காரைக்கால் முகம்மது ஸமதானி அச்சகத்தில் அச்சிடப்பட்டது. இரண்டாம் பதிப்பு 1883 ஆம் ஆண்டு இலக்கியச் செல்வர் எம்.செய்யது முஹம்மது 'ஹஸன் ' அவர்களால் சென்னை, மில்லத் பிரிண்டர்ஸ் மூலம் வெளியிடப்பட்டது.

4. 'குவாலியர்க் கலம்பகம்' ஹலரத் முகம்மது கௌது குவாலீரீ அவர்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு 101 பாடல்களாய் 1882ல் அச்சில் வந்தது.

5. 'திருமக்காத் திரிபந்தாதி' மக்க நகரின் சிறப்பு கூறும் 100 பாடல்கள் கொண்டது. 1895ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வச்சிரயந்திர சாலையில் அச்சிடப்பட்டது.

6. 'நாகூர்ப் புராணம்' ஹஜரத் சாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்களின் வாழ்வின் சிறப்பைக் கூறுவது . மலடு தீர்த்த படலம், சித்திரக் கவித் திரட்டு உட்பட 30 படலங்கள் 1359 விருத்தங்கள் கொண்டது. 1893ஆம் ஆண்டு ம. முகம்மது நயினா மரைக்காயர் பதிப்பு.

7. ஹலரத் செய்யிது அஹமது கபீர் ரிபாயி ஆண்டகை அவர்களின் வரலாறு; நூறுல் அஹ்மதிய்யா என்னும் அறபி நூலின் தழுவல். 2 காண்டங்கள் 43 படலங்கள் 2373 விருத்தங்கள். 1896ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. பெயர்: 'ஆரிபு நாயகம்'.

8. 'பகுதாதுக் கலம்பகம்' ஹலரத் கௌது நாயகம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் அடங்கியுள்ள பகுதாது நகரின் சிறப்பைக் கூறும் 101 பாடல்கள். 1894ஆம் ஆண்டு சென்னை ஆறுமுக விலாச அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டது.

9. 'பதாயிகுக் கலம்பகம்' ஹலரத் செய்யிது அஹ்மது கபீர் ரிபாயி ஆண்டகை அவர்கள் அடங்கியுள்ள பதாயிகு நகர் சிறப்பு உரைக்கும் 101 பாடல்கள் கொண்டது. 1900ல் அச்சில் வந்தது. 1901 ஆம் ஆண்டு மதுரையில் நிறுவப்பட்ட நான்காம் தமிழ்ச்சங்கத்தின் பெருமைகள் உரைக்கும் நூல்.

10. மதுரைத்தமிழ்ச் சங்கத்துப் புலவராற்றுப் படை. இதன் முதற்பதிப்பு 1903 ஆம் ஆண்டு. மறுபதிப்பு 1968ல் வெளிவந்தது. பதிப்பித்தவர் இலக்கியச் செம்மல் கலாநிதி.ம.மு. உவைஸ்(இலங்கை). நாகூர் தறுகா ஷரீப் சிறப்புகளை 100 பாடல்களில் விவரிப்பது.

11. 'தறுகா மாலை' நாவலர் குலாம் காதிறு மகன் வா. கு. முஹம்மது ஆரிபு நாவலர் 1928ஆம் ஆண்டில் மூன்றாம் பதிப்பை வெளியிட்டுள்ளார் . முதல் மற்றும் இரண்டாம் பதிப்புகள் வெளிவந்த காலங்கள் குறிப்பிடப் படவில்லை. (கஃபா - மக்கா, மஸ்ஜுதுன் நபவி - மதீனா , பைத்துல் முகத்தஸ் - பாலஸ்தீன் ஆகிய மூன்று புனித இறையில்லங்கள் தவிர்த்து மற்றவை குறித்த மிகையான புகழ்ச்சிகளில் எனக்கு உடன்பாடில்லை - நல்லடியார்)

12. 'மும்மணிக் கோவை'

13. 'மக்காக் கோவை'

14. 'மதினாக் கலம்பகம்'

15. 'பகுதாதுய மக அந்தாதி'

16. 'சச்சிதானந்த மாலை'

17. 'சமுத்திர மாலை'

18. 'மதுரைக் கோவை'

19. 'குரு ஸ்தோத்திர மாலை'

20. 'பத்துஹுல் மிஸிர் பஹனஷாப் புராணம்'

21. நாகூராரின் வரலாற்றை அழகிய தமிழ் உரை நடை நூல் 'கன்ஜூல் கறாமத்து' எனும் பெயரில் அச்சில் வந்தது. காலம் 1902.

22. 'சீறாப்புராண வசனம்'

23. 'திருவணி மாலை வசனம்'

24. 'ஆரிபு நாயகம் வசனம்'

25. 'சீறா நபியவதாரப் படல உரை'

26. 'சீறாநபியவதாரப் படல உரை கடிலக நிராகரணம்'

27. 'நன்னூல் விளக்கம்'

28. 'பொருத்த விளக்கம்'

29. 'இசை நுணுக்க இன்பம்'

30. 'அறபித்தமிழ் அகராதி'

31. 'மதுரைத் தமிழ்ச் சங்க மான்மியம்'

32. அதிரை நவரத்தின கவி காதிறு முஹ்யித்தீன் அண்ணாவியரின் 'பிக்ஹு மாலை உரை' முதற் பதிப்பு 1890ம் ஆண்டில் வெளி வந்தது. அந்நூலின் இரண்டாம் பதிப்பை 1990 ஆம் ஆண்டு புலவர் அ.முஹம்மது பஷீர் வெளிக் கொணர்ந்தார் .

33. நாகூர் பெரியார் முஹ்யித்தீன் பக்கீர் சாஹிபு காமில் என்கிற செய்யது அப்துல் வஹ்ஹாப் ஆலிம் அவர்களின் 'தறீக்குல் ஜன்னா' (ஹி 1335). மேலும் ,

34. இலக்கணக் கோடாரி பேராசிரியர் திருச்சி கா. பிச்சை இபுறாஹிம் புலவரின் 'திருமதினத்தந்தாதி உரை' (1893).

35. இவை தவிர ரைனால்ட்ஸ் என்பார் ஆங்கிலத்தில் எழுதிய 'உமறு' என்னும் புதினத்தைத் தமிழாக்கி வெளியிட்டார் நாவலர். நான்கு பாகங்களிலான அந்நூலின் பெயர் ' உமறு பாஷாவின் யுத்த சரித்திரம்'.


முத்தமிழ் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு தொடரும்....

Wednesday, July 12, 2006

முத்தமிழ் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு (பகுதி-2)

'சங்கத் தமிழுக்குத் தலைநகர்' மதுரை என்றால் முஸ்லிம்களின் 'தங்கத் தமிழுக்குத் தலைநகர்' தஞ்சைத் தரணியைக் குறிப்பிடலாம். கி.பி.பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நாகூர் தமிழ் முஸ்லிம் புலவர்கள் பிறந்தார்கள்; புலமையில் சிறந்தார்கள். தமிழ் இலக்கிய உலகிற்கு ஒரு பொற்காலம் அமைத்திட புதிய அத்தியாயம் துவங்கியது. பதினெட்டாம் நூற்றாண்டில் நாகூர் முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் எண்ணிக்கையில் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் ஒரே காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். இது இலக்கியவாதிகளுக்கு இனிக்கும் செய்தி. இனி எழுதப்படும் தமிழ் வரலாற்று நூல்களில் இடம் பெற வேண்டிய குறிப்பு .

"இறைவனிடம் கையேந்துங்கள்! அவன் இல்லையென்று சொல்லுவதில்லை!!" என்று இசை முரசு கொட்டிய நாகூர் E.M. ஹனீபாவை அறிந்த அளவுக்கு, அவர் பாடிய பெரும்பாலான பாடல் வரிகளை எழுதியக் கவிஞர் பெருமக்கள் அறியப்படவில்லை. (நாகூர் ஹனீபாவின் சில பாடல்வரிகள் இஸ்லாத்திற்குப் புறம்பான கருத்துக்களைக் கொண்டிருக்கின்றன என்ற விவாதத்திற்குள் நுழையாமல் இத்தொடரின் கருவான தமிழ் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பை மட்டும் பார்ப்போம்.)

நாகூர் ஹனீபா பாடிய பெரும்பாலான பாடல்களை இயற்றியவர் நாகூர் புலவர் ஆபிதீன் ஆவார். திருவை அப்துல் ரஹ்மான் (M.A. ரஹ்மான்) அவர்கள், " ஞானத்தின் திறவு கோல் நாயகம் அல்லவா " உட்பட சில பாடல்களை எழுதிக் கொடுத்தவர். உத்தம பாளையம் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். கவிமணி கா.அப்துல் கபூர் அவர்களின் சில பாடல்களும் நாகூர் ஹனீபா அவர்களால் பாடப் பட்டுள்ளன.

கவிமணி பேரா . கா. அப்துல் கபூர் அவர்கள் தமிழக அரசின் பொற்கிழி விருது பெற்றவர் . இவரின் "மிக்க மேலானவன்" புத்தகம் இறைமறையின் 87ஆவது அத்தியாயத்தின் விளக்கவுரை போல் அமைந்ததாகும்." ஞானப்புகழ்ச்சி ஓர் ஆய்வு" எனும் புத்தகம் தக்கலை பீரப்பா அவர்களின் பாடலை இவர் ஆய்வு செய்து எழுதியது .

இறையருட் கவிமணி, தமிழ்ச் செம்மல், தீன்வழிச் செம்மல், நபிவழிச் செல்வர் , கன்சுல் உலூம் (அறிவுக் களங்சியம்) ஆகிய கெளரவங்களைப் பெற்ற பேராசிரியர் கா. அப்துல் கஃபூர் எம். ஏ.,டி.லிட் அவர்களைத் தமிழ் கூறும் நல்லுலகம் நன்கு அறியும். ஒரு தமிழ்ப் பேராசிரியரால் கல்லூரி முதல்வராகவும் பன்மொழிப்புலவராகவும், பன்னூல் ஆசிரியராகவும் கவிஞராகவும், சொற்பொழிவாளராகவும், தமிழ் மொழிக்கும் சமுதாயத்துக்கும் அரை நூற்றாண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அவருக்குத் 'தமிழ்ச் செம்மல்' விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது. அவரது தமிழ்ப்புலமைக்குச் சான்றாக அமையும் அவரது 'அரும் பூ ' என்னும் குழந்தைப்பாடல் நூலினை ஆய்வு செய்தோர், பல்கலைக் கழகங்களில் ஆயுவுப் பட்டம் பெற்றுள்ளனர். 'இனிக்கும் இறைமொழிகள்' என்னும் பெயரில் பேராசிரியர் அவர்கள் , திருக்குர் ஆன் வசனங்கள் சிலவற்றிற்கு விளக்கவுரை எழுதி வெளியிட்டுள்ள ஆய்வுகள் அறிஞர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

இவையன்றி, கற்கண்டு சொற்கொண்டு உரையாற்றி உள்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடல் கடந்த நாடுகளிலும் முத்திரை பதித்த மூத்த தமிழரிஞர். இறையருள் பொழியும் கவிதைக் கொண்டல். அரும்பு உள்ளங்களுக்கும் கவிமழை தந்த கரும்புக் கவிஞர் இவர். பைந்தமிழ் நாட்டில் பாட்டரங்குகள் தோன்றக் காரணமான முன்னோடி. வாடாத மாலை இலக்கியங்கள் பலவற்றை வண்ணத் தமிழில் இயற்றிச் சிறந்த காலத்தின் கண்ணாடி. உரைநடைத் தமிழில் உயிரூட்டப் பாணியை ஆக்கி 'அழகு தமிழுக்கோர் அப்துல் கஃபூர் ' எனப் பல்கழைக் கழகத் தமிழ்த் துறை தலமைப் பேராசிரியராலேயே பாரட்டப் பட்டவர்.

சென்னை பச்சையப்பன் கல்லூரி, திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி, அதிராமப்பட்டினம் காதிர் முஹைதீன் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் முதல்வராகப் பணியாற்றியவர். தமது இளவல் பேரா. முஹம்மது பாரூக் அவர்களின் உறுதுணையோடு "மதி நா " (அறிவும் நாவும்) என்ற இதழைப் பல்லாண்டுகளாக நடத்தியவர்.

பேராசிரியர். முஹம்மது பாரூக் அவர்கள் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் பேராசிரியர் மற்றும் சென்னை புதுக்கல்லூரியில் சிறப்புப் பேராசிரியர் . தமிழ் இலக்கியக் கூட்டங்கள் பலவற்றைத் தலைமையேற்று நடத்தியவர். தற்போதும் மலேசியா, சிங்கப்பூர் என ஒழிவின்றி, தமிழ் இலக்கிய மாநாடுகளில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, தமிழ்த் தொண்டு செய்து வருபவர்.

தமிழிலக்கிய வளர்ச்சியில் நாகூர் தந்தத் தமிழ்ச் செல்வர்களைப் பற்றிய தகவல்கள் மலைக்க வைக்கின்றன. 17-18 ஆம் நூற்றாண்டுகளில் சம காலத்தில் வாழ்ந்த புலவர் பெருமக்களில் சிலர் மொழிப் புலமையும், சமய அறிவும் ஒரு சேரப் பெற்றிருந்தனர். வேறு சிலர் தமிழோடு பிறமொழி ஞானம் பெற்று பன்மொழிப் புலவர்களாக உலா வந்துள்ளனர். மற்றும் சிலர் இறைமறை வெளிப்படுத்தப்பட்ட மொழியான அரபியில் ஆழ்ந்த அறிவும் ஆன்மீகத் துறையில் தேர்ந்த பக்குவமும் பெற்று திகழ்ந்திருக்கிறார்கள்.

இவர்களுள் வணிகம் புரிந்து பொருள் குவித்த வித்தகர்களும் உண்டு. மொத்தத்தில் நாகூர் தந்த நற்றமிழ் புலவர்களின் அறிவு, ஆற்றல், படைப்புத் திறன், கற்பனை வளம், மற்றவர்களை மிஞ்சக் கூடியதாகவும் விஞ்சக் கூடியதாகவும் இருந்த உண்மையை மெய்ப்பிக்க - அவர்கள் விட்டுச் சென்ற - இன்றும் நம்மிடையே உள்ள இலக்கியச் செல்வங்கள் போதியனவாகும். அவர்களின் இலக்கியப் பணி ஒட்டு மொத்த தமிழ் சமுதாயமும் எண்ணி மகிழத்தக்கவை! ஏற்றம் பெற்ற நிலையினை எடுத்துரைப்பவை!

நாகூர் தமிழ் முஸ்லிம் புலவர்கள் பற்றிப் பேச முற்பட்டால் அல்லது எழுதிடத் தொடங்கினால் அறிஞர் வட்டத்தினரின் நினைவுக்கு வருபவர், நெஞ்சில் நிழலாடுபவர் வா. குலாம் காதிறு நாவலரே ஆவார். அவரை முன்னிறுத்தியே பேசவும் எழுதவும் செய்கிறோம் . அவர் பற்றி அறிந்து வைத்துள்ள அளவு , அவருடைய சம காலத்திலே வாழ்ந்த மற்ற புலவர்களை நாம் அறிந்து வைக்கவில்லை . அவருடைய படைப்பு இலக்கியங்கள் கிடைக்கும் அளவில் மற்றவர்களின் படைப்பு இலக்கியங்கள் கிடைப்பதுமில்லை.

தஞ்சை மாவட்டத்தில் அதிகம் அறியப்படாத முஸ்லிம் தமிழறிஞர்களின் பட்டியல் கீழ்க்கண்டவாறு நீள்கிறது:

1. ஆயுர்வேத பண்டிதர் வாப்பு மகன் மகா வித்வான் வா.குலாம் காதிறு நாவலர்,
2. பிச்சை நயினார் மகன் பாவகை வல்ல கல்விக்களஞ்சியம் முகம்மதுப் புலவர்,
3. நெ.மதாறு சாகிபு நகுதா மகன் பெரும்புலவர் நெயினா மரைக்காயர்,
4. கி.அப்துல் காதிர் சாகிபு மரைக்காயர் மகன் மதுரகவி வாருதி செவத்த மரைக்காயர்,
5. இபுறாகிம் லெப்பை மரைக்காயர் மகன் இ.கிதுறு முகம்மது மரைக்காயர்,
6. மீறா லெவ்வை மரைக்காயர் மகன் அல்லி மரைக்காயர்,
7. முகம்மது உசேன் சாகிபு மரைக்காயர் மகன் மு. செவத்த மரைக்காயர்,
8. முஆக்கின் சாகிபு நகுதா மகன் முகியுத்தீன் அப்துல் காதிறுப் புலவர்,
9. செய்கு சுல்தான் சாகிபு மரைக்காயர் மகன் குலாம் முகம்மது சாகிபு மரைக்காயர்,
10.அ.தம்பி சாகிபு மரைக்காயர் மகன் சீரியர் செவத்த மரைக்காயர்,
11. பகீர் முகியித்தீன் மகன் வாஞ்சூர் பகீர்,
12. யூ.சின்னத் தம்பி மரைக்காயர் மகன் யூ. சி.பக்கீர் மஸ்தான்,
13. ப.கலீபா சாகிபு மகன் பகீர் முகியித்தீன்,
14. முகம்மது நயினா ராவுத்தர் மகன் 'தரகு' நாகூர்க் கனி ராவுத்தர்,
15. ஆதம் சாகிபு மகன் முகம்மது முகியுத்தீன் சாகிபு,
16. தம்பி மாமா மரைக்காயர் மகன் முகம்மது அலி மரைக்காயர்,
17. சி.யூசுபு மகன் வாஞ்சூர் பகீர்,
18. ச.அப்துல் காதிர் நயினா மரைக்காயர் மகன் முகம்மது முஹிய்யித்தீன் மரைக்காயர்,
19. மீ. செய்கு சுல்தான் சாகிபு மரைக்காயர் மகன் குலாம் முஹம்மது சாகிபு மரைக்காயர்,
20. முகம்மது அலி மரைக்காயர் மகன் முகம்மது இமாம் கஸ்ஸாலி மரைக்காயர்,
21. கோ.மு. முகம்மது நைனா மரைக்காயர் மகன் (காரைக்கால்) கோசா மரைக்காயர்,
22. சு.பகீர் முகியித்தீன்,
23. செ.கமீது மஸ்தான்,
24. ம.முகம்மது மீறா சாகிப் புலவர்,
25. தளவாய் ம. சின்னவாப்பு மரைக்காயர்,
26. கா. பெரிய தம்பி நகுதா,
27. க.காதிறு முகியித்தீன் சாகிபு,
28. இ.செய்யது அகமது,
29. மு.சுல்தான் மரைக்காயர்,
30. வா.முகம்மது ஹுஸைன் சாஹிபு மகன் மு. ஜெய்னுல் ஆபிதீன் (புலவர் ஆபிதீன்),
31. பண்டிட் எம்.கே. எம் ஹுஸைன்,
32. வா.கு. முஹம்மது ஆரிபு புலவர்,
3. வா.கு. மு. குலாம் ஹுஸைன் நாவலர்.

இவர்களுள் காலத்தால் முந்தியவர் முதன் முதலில் இலக்கியம் படைத்தவர் பிச்சை நயினார் மகன் முகம்மதுப் புலவர். ஆனால் அதிக எண்ணிக்கையிலான பல்வேறு வகைப்பட்ட இலக்கியங்கள் படைத்தளித்தவர் வா .குலாம் காதிறு நாவலரே ஆவார். அவருடைய ஆக்கங்களில் செய்யுள்களானவையும் உள ; உரை நடைகளிலானவையும் உள. கூடவே மொழிபெயர்ப்பு நூல்களும் உள. அந்த வகையில் நாகூர் முஸ்லீம் தமிழ்ப் புலவர்களில் அவரை தலைமைப் புலவராகக் கொள்வதும் கொண்டாடி மகிழ்வதும் மிகச் சரியான செயலாகும். 'தண்டமிழுக்குத் தாயா'கிய நான்காம் தமிழ்ச் சங்கத்தின் நக்கீரர் அல்லவா அவர்!

நம் கவனத்தில் வந்த மேற்கண்ட தமிழரிஞர்களின் படைப்புகள் வெகுசனங்களை ஈர்க்காமல் போனதற்கு அவர்களில் பெரும்பாலோர் இஸ்லாத்தைப் பற்றி மட்டுமே எழுதியதால் பிறமத இலக்கியவாதிகளின் கவனத்தைப் பெறவில்லை. மேலும், முஸ்லிம்களைப் பற்றி எழுதியவையும் இஸ்லாமிய நெறிகளுக்கு முரணான கருத்துக்களைக் கொண்டிருந்ததால் முஸ்லிம்களிடமும் முக்கியத்துவம் பெறவில்லை என்பதே முக்கியக் காரணமாகும் எனக் கருதுகிறேன்.

முத்தமிழ் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு தொடரும்...

Wednesday, July 05, 2006

முத்தமிழ் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு (பகுதி-1)

'தமிழுணர்ச்சியும் முஸ்லிம்களும்' என்ற திராவிடத் தமிழர்களின் பதிவில் காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் மற்றும் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆகியோரின் தமிழ்பற்று மட்டுமே பிரதானப்படுத்தப்பட்டு பெரும்பாலான தமிழ் முஸ்லிம்கள், தமிழைப் புறக்கனிக்கிறார்கள் என்ற தொனியில் கருத்துக்கள் இருந்தன.

அரேபியாவிலிருந்து சர்வ தேசங்களுக்கும் பரவிய இஸ்லாம் அதன் மூலமொழியாகிய அரபியை மட்டும் சார்ந்து வளரவில்லை. உலகலாவிய மார்க்கத்தைப் பேணும் சமூகத்தவரை ஒரு மொழிக்குள் அடக்கிப் பார்ப்பதில் நியாயமில்லை. எனினும் தமிழ் மொழி பேசும் முஸ்லிம்கள் தமிழுக்காற்றிய பங்களிப்புகளை அறிந்து கொள்வது தமிழ் கூறும் நல்லுலகிற்கு அவசியமாகிறது.

இத்தொடரில் குறிப்பிடப்படும் முஸ்லிம் தமிழ் பண்டிதர்களும் புலவர்களும் சிலசமயம் இஸ்லாமிய அடிப்படை நெறிகளிலிருந்து விலகி தமிழூழியம் புரிந்துள்ளனர். அவர்களின் அனைத்து படைப்பிலக்கியங்களிலும் எமக்கு உடன்பாடு இல்லாவிடினும், தாய்த் தமிழுக்கு அவர்கள் ஆற்றிய சேவைகளைக் குறிப்பிட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

கடந்த சில நூற்றாண்டுகள் வரையில் பேரறிஞர்களின் அறிவுத் தேடல்களுக்குத் தலைநகராய் விளங்கிய இராக், சிலுவைப் போர்களால் சின்னாபின்னப்பட்டபோது, பாக்தாத் நூலகங்களிலிருந்த அரிய புத்தகங்கள் தீயிலிட்டுச் சாம்பலாக்கி யூப்ரடிஸ்-டைக்கிரிஸ் நதிகளில் வீசப்பட்டதால் நதிநீர் கருப்பு நிறத்தில் ஓடியதாக வரலாற்றின் மூலம் அறிகிறோம்.

ஐரோப்பிய வரலாற்றின் இருண்டகாலங்கள் (Dark ages of Europe) என்று சொல்லப்படும் கி.பி . பத்து முதல் பதினான்காம் நூற்றாண்டுகளில் ஸ்பெயின் கல்வியில் சிறந்து விளங்கியது. வான் நட்சத்திரங்களுக்கு பெயரிட்டது முதல் விண்ணிலும் மண்ணிலும் அவர்கள் சாதனையாளர்களாகத் திகழ்வதற்கு இஸ்லாம் எந்தவகையிலும் தடையாக இருக்கவில்லை .

முஸ்லிம்களின் ஐம்பெருங் கடமைகளுக்கு அடுத்தபடியாகக் கல்வி கற்பதை ஆணுக்கும் பெண்ணுக்கும் கடமையென்று வலியுறுத்திய மதம், உலகில் இஸ்லாத்தைத் தவிர ஏதேனும் உண்டா என்று தெரியவில்லை. இப்படி கல்வியோடும் நூல்களோடும் தொடர்புடைய முஸ்லிம்கள், தேனினுமினிய தமிழுக்குச் செய்ததை உலகமறியச் செய்திடும் ஒரு சிறு முயற்சியே இப்பதிவு .

இயல்-இசை-நாடகம் என்று முத்தமிழ் அறியப்படுகிறது. மதி மயங்கி, இறைவனை மறக்கச் செய்யும் இசையையும், இச்சையைத்தூண்டும் விதமாக ஆணும்- பெண்ணும் ஆபாசமாக ஆடிப்பாடுவதையும் இஸ்லாம் தடுக்கிறது. இந்த இரண்டிற்கும் வழிவகுக்கும் இசை-நாடகம் தவிர்த்து, தமிழ் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு மிகக்குறைவு என்பது தமிழ் முஸ்லிம் இலக்கியங்களை அறியாதோரின் கூற்றாகும். விகிதாச்சார அடிப்படையில் வேண்டுமானால் ஓரளவு குறைவு என்பதை ஒப்புக் கொள்ளலாம்.

மேலும் இவ்விகிதாச்சாரம் குறைந்ததற்கு தமிழிலக்கியங்களை நாளடைவில் இந்து மயமாக்கியதும் ஒரு காரணம். உதாரணமாக கற்பின் மேன்மையை சொல்லும் சிலப்பதிகார நாயகி கண்ணகி தெய்வமாக்கப்பட்டுள்ளதைச் சொல்லலாம்.

கவிதைக்குப் பொய்யழகு என்பதில் ஓரளவு உண்மையுள்ளதால் பொய்யான வர்ணனைகளைச் சொல்லி அளவுக்கதிகமாக மனிதர்களையோ அல்லது படைப்பினங்களையோ புகழ்வதை இஸ்லாம் ஊக்குவிக்கவில்லை.

சங்கத் தமிழ் மன்னர்களின் அவையை அலங்கரித்தப் புலவர்கள் தகுதி இல்லாத மன்னர்களையும் பொய்யாக வர்ணித்துப் பொற்கிழி பெற்றுச் சென்றனர். ஒருவரை அளவுக்கு அதிகமாகப் புகழ்வதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்பது தெரிந்திருந்தும் முஸ்லிம் இலக்கியவாதிகள் தாம் சார்ந்த நெறிக்கு அளிக்காத முக்கியத்துவத்தைத் தமிழுக்கு அளித்திருக்கின்றனர் என்றால் மிகையாகாது.

அந்தக் காலத்து உமருப் புலவர் முதல் இந்தக் காலத்துக் கவிக்கோ வரை தேடத்தேட முஸ்லிம் இலக்கியவாதிகள் வெளிவருகின்றனர்.

முத்தமிழ் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு தொடரும்....

Tuesday, July 04, 2006

'ஆறு'தல்

குமுதத்தில் வரும் ஆறு வித்தியாசங்களை எளிதில் சொல்லி விடலாம். திடீரென்று ஆறு விசயங்களைப் பற்றி எழுதுமாறு திரு.கோவி.கண்ணன் அழைப்பு விடுத்ததும் கை-கால் ஓடவ