Wednesday, June 20, 2007

பர்தாவைப் பிடித்திழுக்கும் பிரதிபா படீல்

இந்திய ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள திருமதி.பிரதிபா படீல், "ந்தியப் பெண்கள் பர்தா அணிவது மடமை; இப்பழக்கம் முகலாயர்களின் படையெடுப்பிலிருந்து பெண்களைக் காத்துக் கொள்ள ஏற்படுத்தப்பட்டது. தற்போது நாம் சுதந்திர இந்தியாவில் வாழ்கிறோம். ஆகவே இப்பழக்கத்தை கைவிட வேண்டும்!" என்று சமீபத்தில் ராஜஸ்தானில் நடந்த கருத்தரங்கில் உரையாற்றியுள்ளார்.

ராஜஸ்தானில் ஆளுநராக இருந்தபோது பா .ஜ.க அரசால் கொண்டுவரப்பட்ட மதமாற்றத் தடை சட்டத்தை கையெழுத்திடாமல் திருப்பி அனுப்பி, பலரின் புருவங்களை உயர்த்திய பெருமை திருமதி. பிரதிபா படீலுக்கு உண்டு. முதன் முதலாக ஒரு பெண்ணை ஜனாதிபதியாகப் பெறவிருக்கும் அருமையான சூழலில் திருமதி. பிரதிபா பட்டீலின் இப்பேச்சு தேவையற்றது என்றே பலராலும் விமர்சிக்கப்படுகிறது.

பர்தாவைப் பற்றிய உண்மையான வரலாறு சார்ந்த தகவல்களை அறியாமல், பரிவாரங்களின் கொள்கைப் பரப்புச் செயலாளர்போல் சம்பந்தமே இல்லாமல் மொகலாயர்களைப் பர்தாவுக்குத் தொடர்பு படுத்தி இருப்பதை அவருடைய அறியாமை என்பதா அல்லது இஸ்லாமிய விரோதம் என்பதா?

மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் முதல் குடிமகள் பதவிக்கு போட்டியிடும் ஒருவரிடமிருந்து, இரண்டாவது பெரும்பான்மையாக இருக்கும் இந்திய முஸ்லிம்களின் பழக்கத்தைப் பற்றி விமர்சிப்பது எந்த வகையில் அவரின் தரத்தை உயர்த்தும்?

இஸ்லாம் உலகில் பரவலான கி. பி ஆறாம் நூற்றாண்டில் என்பதும் முகலாயர்களின் இந்திய வருகை பதினான்காம் நூற்றாண்டுகளிலிருந்து தொடங்கியது என்பதும் நன்கு அறியப்பட்ட வரலாறு. இந்த வரலாற்று உண்மையை அறியாமல், முற்போக்காகப் பேசுகிறோம் என்று மூக்குடைபடுவது தேவையா?

"பண்டைய இந்திய கலாச்சாரத்தில் பெண்கள் கவுரவமாகவே இருந்துள்ளார்கள்" என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சித்துள்ளார் திருமதி. பிரதிபா படீல். ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, தமிழக முதலமைச்சரின் வாழ்த்துக் கவிதை, பண்டைய இந்தியாவில் பெண்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்ற உண்மையை போட்டுடைக்கிறதே!

நாறுகின்ற மட நம்பிக்கைக் குட்டையில் ஊறுகின்ற மட்டையாகி; நாணம்,அச்சம்,மடம்,பயிர்ப்பு என நாலு வேத வழி நடக்கும் பெட்டையாகி;

...

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பதெற்கு என்பதுடன் நிறுத்தாமல்
அவள் ஆளன் மறைந்த பின்னர் அவளுக்கு வாழ்வுதான் எதற்கு-என்று

அனலிடை அவளைக் கருக்கி ஆர்த்தெழும் கொடிய சாத்திரப்

புனலிடை அவள் உடலைக் கழுவி

அந்த உயிரிலா சிலைக்குப் பொட்டிட்டு பூ முடித்து

அம்மன் அவள்தான் என்று பூசை புனஸ்காரம் செய்து...



அண்டை மாநிலமான கேரளாவில் பெண்கள் மேலாடை அணியத் தடை விதிக்கப்பட்டிருந்ததும் ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் 'சதி' எனும் உடன்கட்டை ஏ(ற்)றும் துர்ப்பழக்கம் இன்றும் நடைமுறையில் இருப்பதும் முதல் குடிமகளாக வரவிருக்கும் பிரதிபா படீலுக்குத் தெரியதா? அவற்றையும் பெண்கள் கைவிட முன்வரவேண்டும் என்று சொல்லத் தடையாக இருந்தது எது என்றும் விளக்குவாரா?

முற்காலத்தில்? 'பர்தா' அணியும் பழக்கம் பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக ஏற்றுக்கொண்டது என்று வைத்துக் கொண்டாலும், அதனைக் கைவிடுவதால் இந்தியப் பெண்கள் அத்தகைய அச்சுறுத்தல்களிலிருந்து தப்பி விடுவார்கள் என்று அர்த்தமா? தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் உலகநாடுகளின் சராசரியை விட அதிகம். இதற்கெல்லாம் திருமதி . பிரதீபா என்ன பதில் வைத்திருக்கிறார்?

மாநில ஆளுநராக இருந்துகொண்டிருக்கும் இந்த நிமிடம்வரை அவரும்கூட தலையை மூடிக் கொண்டு மடமையான பர்தாவுடன்தானே பணியாற்றிக் கொண்டிருக்கிறார்! பர்தா அணிந்தாலும் பெண்கள் முன்னேறுவதற்கு எவ்வித இடையூறும் இருக்காது என்பதற்கு தானே முன்னுதாரணமாக இருந்து கொண்டு முரண்பாடாகப் பேசுவதற்கு இவருக்கு ஏற்பட்ட நிர்ப்பந்தம்தான் என்னவோ? பர்தா அணிந்து பிரதமராக மிளிர்ந்த இந்திரா காந்தி, பங்களாதேஷ் சேக் ஹசீனா, கலீதா ஜியா, பாகிஸ்தான் பேனசீர் புட்டோ இவர்களெல்லாம் சிறப்பாக ஜொலிக்க வில்லையா?

அரசியல்வாதிகள் தவறாக அறிக்கை விடுவதும், அதனால் பிரச்சினை எழுந்தால் சம்பந்தப்பட்ட கட்சிகள் "அவரின் தனிப்பட்ட கருத்து" என்று சப்பைக் கட்டுவதும், தங்கள் அறிக்கைகள் "தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுது" என்று நழுவுவதும், "நான் அப்படிச் சொல்லவே இல்லை ; பத்திரிக்கைகயாளர்கள்தான் திரித்து எழுதி விட்டார்கள் " என்று பல்டி அடிப்பதும்தான் நடைமுறை. இதில் ஏதாவது ஒன்றைச் செய்து, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ரப்பர் ஸ்டாம்பாக இருக்க வாழ்த்துக்கள் திருமதி .பிரதிபா படீல் அவர்களே!

பின்குறிப்பு: 2002 இல் குஜராத்தில் முஸ்லிம்களை நரேந்திரமோடி தலைமையில் நரவேட்டையாடி முடித்த பின்னர், மாஜி பிரதமர் வாஜ்பாய் , "இனி எந்த முகத்தை வைத்துக் கொண்டு வெளிநாட்டுத் தலைவர்களை சந்திப்பேன்?" என்று புலம்ப வைத்த சூழலில் மதசார்பற்ற அரசு என்று காட்டிக் கொள்ள கைகொடுத்த ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களுக்கு அன்று சொல்லப்பட்ட தகுதிகள் இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன; எதிர் அணியினர் முன்மொழிந்தார்கள் என்று ஈகோ பார்க்காமல் அவரையே முன்னிருத்தலாம்.

"இல்லை! இல்லை!! இது பெண்கள் யுகம்!" என்று சமத்துவ முழக்கமிடுபவர்கள் , சென்ற முறை அப்துல் கலாமுக்கு இணையாக கம்யூனிஸ்ட்டுகளால் நிறுத்தப் பட்ட கேப்டன் லெட்சுமி சேய்காலையும் பரிசீலிக்கலாமே!

Labels: , ,

Thursday, June 14, 2007

ஒற்றைச்சாளர வீடும், வீடில்லாத சாளரங்களும்.

பேராசிரியர் ஷாம்(தருமி) அவர்கள் எழுதிய பதிவைப்பற்றிய என்னுடைய ஒரு எதிர்வினையில், நான் அவரைத் தனிமனித தாக்குதல் செய்துள்ளதாக நொந்து கொண்டுள்ளார். இங்கு 'நொந்து கொண்டுள்ளார்' என்பதையும் தனிமனிதத் தாக்குதலாகக் கருத மாட்டார் என்று நம்பிக்கையில் 'முடிந்தவரை' என் தரப்பு விளக்கத்தைச் சொல்ல வேண்டியுள்ளது.

தமிழ் வலைப்பதிவுலகில் மதிக்கப்படும் ஒருசில வலைப்பதிவர்களில் தருமி என்ற புனைப்பெயர் கொண்ட திரு.ஷாம் அவர்களை எள்ளலோ ஏளனமோ செய்து அவரின் கேள்விகளையோ பதிவுகளையோ புறந்தள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை. திரு.ஷாம்/தருமி அவர்களின் பதிவுகளுக்கான எனது எதிர்வினைப்பதிவுகள் இஸ்லாத்தைப் பற்றிய தவறான/அவதூறான கருத்துக்களைத் தெளிவுபடுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டவையே என்பதை முதலில் சொல்லிக் கொள்கிறேன்.என்னுடைய வலைப்பூவிலேயே என் நோக்கத்தை அறிவிப்புச் செய்திருக்கிறேன்.

"தருமி என்பதே புனைப்பெயர்தான்; ஆகவே, தருமி சார், திரு.தருமி போன்ற மரியாதைகள் தேவையில்லை" என்று முன்பொரு பதிவில் அவரே சொல்லியுள்ளதால்தான் நானும் 'தருமி ' என்று மொட்டையாக விளித்து எதிர்வினையாற்றினேன். அப்படி எழுதியதாலோ என்னவோ அவை எள்ளல்களாகப் பார்க்கப்பட்டு எதிர்வினைகள் கண்டுகொள்ளப்படவில்லை!

ஒற்றைச்சாளர வீட்டில் வசிக்கும் என்னை, பிறவிசயங்களைவிட மதம் சார்ந்த அதிலும் குறிப்பாக இஸ்லாமிய மதம் பற்றி மட்டுமே தெரிந்த அடிப்படைவாதி! அல்லது இஸ்லாமிஸ்ட்!! என்ற முடிவுக்கு வந்திருக்கும் தருமி, என்னுடைய பல பதிவுகளில் இஸ்லாம் அல்லாத பிறவிசயங்களையும் அல்லது தொடர்புடைய பொதுவிசயங்களையும் எழுதியுள்ளதை அவரின் எந்தச்சாளரமும் காட்டவில்லை எனும்போது வீடற்ற அவரின் பன்முகச் சாளரங்கள் கல்லெறிய மட்டும்தான் திறக்குமோ என்ற ஐயம் எழுகிறது!

இஸ்லாம் ஒன்றும் விவாதிக்கப்படக்கூடாத விசயம் என்று எங்காவது நான் 'பத்வா' கொடுத்திருப்பதாக எவரும் காட்டமுடியுமா? இஸ்லாம் பற்றிய பெரும்பாலான விவாதங்களில் "இஸ்லாம் விவாதங்களுக்கு அப்பாற்பட்ட மார்க்கமல்ல" என்று சொல்வதோடு, தவறான விமர்சனங்களுக்கு ஆதாரப்பூர்வமான விளக்கம் கொடுக்கப்படும் பட்சத்தில், அத்தகைய விமர்சனங்களையோ அல்லது குற்றச் சாட்டுகளையோ திருத்திக்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனேயே எழுதியுள்ளேன். ஒரு சாராரால் சரியென நம்பப்படும் ஒரு கொள்கையை விமர்சிக்கப் பொதுவில் வந்துவிட்டு,சம்பந்தப்பட்டவர்கள் பதில் கொடுக்கும்போது, "நான் அப்படி கேட்கவே இல்லையே " என்பதும், கருத்து விளக்கம் கொடுப்பதைத் தனிமனிதத் தாக்குதல் என்று ' கண்டு கொள்ளாமல்' செல்வதும் ஒரு பக்குவப்பட்ட விமர்சகனுக்கு அழகா?

பிறமதங்களை ஒப்பீடு செய்ததற்கு 'காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு' என்ற உங்களின் அளவீடு இஸ்லாம் விசயத்திலும் பொருந்தும்தானே! இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் வைக்கும் விமர்சனங்கள் (முஸ்லிம்களின் மனத்தை அவற்றில் சில புண்படுத்தியபோதும் ) நாகரிகமாகத்தானே இதுவரை பதில் சொல்லியுள்ளோம். இஸ்லாம் மட்டும் எவராலும் விவாதிக்கப்படலாம்; ஒப்பீட்டிற்காகக் கூட பிறமதங்களை என் போன்ற இஸ்லாமிஸ்டுகள்!? விமர்சித்தால் அதற்குத் தப்பர்த்தம் கற்பிப்பதில் என்ன நியாயம் தருமி?

உங்களின் இஸ்லாம் பற்றிய விமர்சனங்களுக்கான எனது பதில்கள் உங்களுக்கு எள்ளலாகவோ ஏளனமாகவோ தெரியலாம்.அதே அளவுகோல் உங்கள் விமர்சனங்களுக்கும் பொருந்தும்தானே? "பிற தெய்வங்களை நிந்தனை செய்யாதீர்கள்; ஏனெனில் அவற்றை நம்புவோர் (அறியாமல்) அல்லாஹ்வை நிந்திப்பார்கள்" என்ற குர்ஆனின் போதனையை நம்பும் எந்த முஸ்லிமும் பிற தெய்வங்களை நிந்திக்க மாட்டான். இந்த எல்லைக்குள் நின்று விவாதிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதால்தான் பெரும்பாலான விவாதங்களில் முஸ்லிம்களின் கருத்துக்கள் பின்தள்ளப்படுகின்றன.

தெருப்பிள்ளையார் பற்றியும் சவஊர்வலம் பற்றியும் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் கூட 'பாங்கு அழைப்பொலி' யையும் ஒருசில நிமிடங்கள் நடத்தப்படும் தொழுகையையும் "இடையூறு" என்று குறிப்பிட்டதால் ஒப்பீட்டிற்காகச் சொன்னதுதான். LR ஈஸ்வரியின் பாடலையோ அல்லது சீர்காழி கோவிந்தராஜன் பாடலையோ ஒப்பிட்டதுகூட பாங்கு அழைப்பை அபஸ்வரமாகச் சொன்னவர்களின் காதில் உரைக்க வேண்டும் என்பதற்காகத்தான். நீங்கள் இஸ்லாத்தைப் பற்றி வைப்பவை எல்லாம் 'கேள்விகள்'; நாங்கள் பதிலுக்கு வைத்தால் அவை மட்டும் 'தனிமனித துவேசம்'! நன்றாக இருக்கிறது ஐயா உங்கள் விவாத நியாயம்!

'ஒரு பயணியின் குழப்பம்' என்ற பதிவில் சற்று நகைச்சுவையாக உங்களின் குழப்பத்தைச் சொல்ல முனைந்தேன். கூரை வீட்டில் இருப்பவர் இன்னொரு கூரை வீட்டையோ அல்லது மாடி வீட்டையோ விமர்சிக்கலாம். ஆனால் எந்த வீடுமே சரியல்ல என்று வீட்டை விட்டு வெளியேறியவர், வீட்டில் வசிப்பவர்களை விமர்சிக்கலாமா? வீட்டிலிருப்பவனை நோக்கி கல்லெறிந்ததோடு அவனும் அந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று எதிர்பார்ப்பதுதான் பகுத்தறிவா? என்ற முரண்பாட்டைச் சொல்லவே அப்பதிவு.

'மறுப்பது மட்டும்தான் நாத்திகமா?', 'நாத்திகர்கள் எல்லோரும் அறிவாளிகளா?' போன்ற பதிவுகளில் இறைமறுப்பாளர்களைப் பற்றிய எனது புரிந்துகொள்ளலையும் சொல்லியுள்ளேன். அறிவுஜீவியாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை; " இஸ்லாம் தவிர்த்து எதுவும் தெரியாத ஒற்றைச் சாளரவாசி" என்ற என்னைப் பற்றிய உங்களின் தவறான கணிப்பீட்டைச் சுட்டவே சொல்கிறேன்.

'தருமி வாங்கிய நோக்கியா ஃபோன்' என்ற பதிவில் இறைவன் கொடூரமானவன் என்ற உங்களின் கருத்துக்கு, மகனை எச்சரித்து அல்லது அடித்து திருத்தும் தந்தையை ஒப்பிட்டேன் ."அல்லாஹ் அவனைத் துண்டு துண்டாக ஆக்கிவிடுவான் " என்ற அறிவிப்பைப் பற்றிய மேலதிக தகவலை (ஹதீஸ் நூல், எண், இணையச் சுட்டி) தரவும். ஒருவேளை மொழிபெயர்த்தவர் கசாபு கடைக்காரரோ என்னவோ :-) மேலும் அரபு மொழியின் வர்ணனைகள் கேட்பவருக்குச் சிலநேரம் சற்று கொடூரமாகத் தெரிந்தாலும், அரபி மொழியில் அதனை வாசிப்பவர்களுக்கு அவ்வாறு தெரியாது.

ஒரு கருத்தை வலியுறுத்தச் சொல்லப்படும் உவமைகளைவிட கருத்துக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது மொழியியலின் மரபு என்பது பேராசிரியராகப் பணியாற்றிய உங்களுக்குச் சொல்லித் தெரியவேண்டுமா?. மேலும் நீங்கள் குறிப்பிடுவது குர் ஆனுடைய வசனமோ நபிகளாரின் சொற்களோ அல்ல என்பதை நீங்கள் அறியவில்லையா?

//1. மற்ற மதத்தினரின் பாடல்களை உங்கள் பதிவில் கும்மிப் பாட்டு, குத்துப் பாட்டென்று நீங்கள் சொல்லியிருந்தாலும் உடனே உங்கள் பதிவுகளுக்கு வந்து யாரும் எதிர்ப்பாட்டு பாடவில்லை. ஆனால் இதேபோல் பாங்கொலி பற்றி யாராவது கொஞ்சம் கேலி செய்திருந்தால் உங்களின் நிலைப்பாடு என்னவாக இருந்திருக்கும் என்று எனக்குத் தெரியும். இந்த வேற்றுமை ஏனென்பதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்களேன் . என் மதம் என் உயிருக்கும் மேலானென்பதைத் தவிர வேறேதும் பதில் உண்டா?//

//மற்ற மதத்தினரின் பாடல்களை உங்கள் பதிவில் கும்மிப் பாட்டு, குத்துப் பாட்டென்று நீங்கள் சொல்லியிருந்தாலும் உடனே உங்கள் பதிவுகளுக்கு வந்து யாரும் எதிர்ப்பாட்டு பாடவில்லை// என்று என் எதிர்வினையைக் கூட சாமர்த்தியமாக திரிக்கும் உங்களுக்கு நேசகுமார் , முஸ்லிம்களின் தொழுகை அழைப்பொலியை "அபஸ்வரம்" என்று சொன்னபோது உரைக்கவில்லையே! ஏன்?

//நான் நடுத்தெரு இந்துக் கோவில்களைப் பற்றி விமர்சனம் செய்திருந்தும் ஒரே ஒரு இந்துவாவது ஏதாவது நொண்டிச் சாக்கு சொல்லியுள்ளாரா?// முஸ்லிம்கள் மசூதிக்கென ஒதுக்கப்பட்ட பகுதியில் மட்டுமே தொழுகிறார்கள். அதுவும் வக்பு போர்டு அல்லது தனிநபரால் வழங்கப்பட்ட இடங்களில் மட்டுமே தொழுகிறார்கள். சிலசூழலில் (இடப்பற்றாக்குறை,குறிப்பிட்ட தொழுகை நேரத்தை தவற விடக்கூடாது என்ற) சில காரணங்களால் சுற்றியுள்ள இடங்களில் தொழுகிறார்கள் . (இதையும் முஸ்லிம்கள் தவிர்க்க முயல வேண்டும் என்று சொல்லியுள்ளதற்கு நன்றியும் சொல்லியுள்ளீர்கள்). தெருப்பிள்ளையார் கோவில்கள் நிலை அப்படியா? பொதுமக்களுக்கு இடையூறு என்று சொல்பவரின் கண்ணில் படாமல் மறைத்தது எது என்று கேட்டால் நொண்டிச் சாக்கு என்று உங்களின் குறைபார்வையை நியாயப்படுத்துவதா?

//என்னை வேற்றொரு மதக்காரனாகப் பார்த்தாலும் இந்து கோவில்களைப் பற்றிப் பேசும்போது கூட நான் என்ன சொல்கிறேன்; அது சரியா என்றுதானே அந்த மதக்காரர்கள் பார்த்தார்கள். நான் மதத்தைத் தாக்குவதாக யாரும் கிஞ்சித்தும் நினைக்கவில்லையே. ஏன்? எது சரி ? ஒருவேளை உங்களைப் போல அவர்களும் இருந்தால்தான் சரியா? புரியவில்லை.//

மற்றவர்கள் உங்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை என்பதற்காக, நீங்கள் சொல்வதெல்லாம் சரியென்றாகி விடுமா? ஓரளவு கிறிஸ்தவ ஞானமுள்ள வலைப்பதிவு நண்பர்கள் (ஜோ,Cyril அலெக்ஸ்,TPR ஜோசப் போன்றவர்கள்) கூட உங்கள் கேள்விகளைக் கண்டு கொள்ளவில்லை. உங்கள் நம்பிக்கையைத் தவறென்று உணர உங்களுக்கு உரிமையுண்டு;அதேபோல் எல்லோருடைய நம்பிக்கைகளும் தவறாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியா?

முஸ்லிம்களெல்லாம் ஒற்றைச்சாளரவாசிகள் என்ற முடிவுக்கு வந்த உங்களுக்கு, இயேசுவுக்குப் பின்வந்தவர்களால் மாற்றப்பட்ட கிறிஸ்தவத்தைக் கேள்வி கேட்டவர்கள்தான் முஹம்மது நபியைப் பின்பற்றும் முஸ்லிம்கள் என்பது தெரியுமா? சிந்திப்பதை மார்க்கக் கடமையாகச் சொல்லும் இஸ்லாம் பற்றி என்றாவது சிந்தித்திருப் பீர்களா? ஒரு பின்னூட்டத்தில் நண்பரொருவர் கேட்டிருப்பதுபோல் , நாத்திகராகும் பலரில் முஸ்லிமல்லாதவர்களே அதிகம் என்பது ஏன் என்று சொல்ல முடியுமா?

நண்பரே, இணையத்தில் கருத்துக்களால் உறவாடும் நம்மை இணைப்பது தமிழ் மட்டுமே. இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரங்கள் ஒன்றும் புதிதல்ல.முஹம்மது நபியின் மரணத்திற்குப் பிறகும் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்க முடியவில்லையே! கேட்ஸ்டீவனையும், கமலா சுரைய்யாவையும் இன்னும் எத்தனையோ துறைசார் சிந்தனையாளர்களையும் எந்த முஸ்லிம் மன்னர் வாளால் மதம் மாற்றினார்? இவர்களெல்லாம் கேள்வியே கேட்டிருக்க மாட்டார்கள் என்று நம்புகிறீர்களா? இஸ்லாத்தைப் புரிந்து கொள்ளக் கேள்வி கேட்பதையே இஸ்லாம் விரும்புகிறது. அவ்வாறு கேட்பவர்களுடன் அழகிய முறையில் விவாதிக்கச் சொல்கிறது. ஆனால் உங்களில் எத்தனைபேர் அழகிய விவாதத்திற்கு தயாராக உள்ளீர்கள் என்று உங்கள் மனசாட்சி தீர்ப்பளிக்கட்டும்.

அதிகம் சொல்வதற்கு ஒன்றுமில்லை நண்பரே, உங்கள் கருத்துக்களுக்கான எதிர்வினைகளை 'எள்ளல், ஏளனம் , நொண்டிச்சாக்கு, தனிமனித தாக்குதல்' என்று பல்வேறு வசதியான சொல்லாடல்களில் புறந்தள்ள வாய்ப்பிருக்கும் உங்களிடம் எந்தப்பதிலும் எடுபடாது. ஏற்கனவே சொன்னதுபோல் சொல்லப்படும் எந்த பதிலுடனும் "ஏன்?" என்று சேர்த்துக் கொண்டால் எவரும் தருமியாகி விடலாம்.

தமிழிணைய உலகில் முகம் தெரியாமல் உரையாடும் வாய்ப்பை என் நம்பிக்கைகளைக் குறைசொல்பவர்களுக்கு, நான் மெய்யென நம்பி நிலைத்து நிற்பதைத் தெளிவுபடுத்தவே பயன்படுத்தி உள்ளேன். இதுவரை தனிமனித நம்பிக்கைகளை அவ்வப்போது தாக்கிக் கொண்டிருக்கும் நீங்கள், நான் தனிமனிதத் தாக்குதல் செய்வதாக நொந்து கொள்வதுதான் வியப்பாக உள்ளது!

Labels: , ,

Tuesday, June 12, 2007

"ஹலோ மிஸ்டர் NRI"

அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கான தொலைபேசிக் கட்டணத்தை தனியார் தொலைபேசி நிறுவனங்கள் கணிசமாக குறைத்துள்ளன.இதையடுத்து பி.எஸ்.என்.எல். நிறுவனமும் இந்த நாடுகளுக்கான கட்டணத்தை வெகுவாகக் குறைத்துள்ளது.

தனியார் நிறுவனங்களை விட பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கட்டணம் குறைவாக மாறியுள்ளது. புதிய விகிதப்படி, அமெரிக்காவிற்கு பேச நிமிடத்திற்கு ரூ.1.75 எனவும், வளைகுடா நாடுகளுக்கு பேச ரூ.6.75 என்றும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இது தனியார் நிறுவனங்களை விட நிமிடத்திற்கு 25 பைசா குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

வளைகுடாவில் பணியாற்றும் இந்தியர்கள், அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் சேவகம் செய்யும் இந்தியர்களைவிட குறைவான சம்பளத்தில் வாழ்கிறார்கள். வாயையும் வயிற்றையும் கட்டி கடின உழைப்பில் சம்பாதித்ததில் பெரும் செலவாக தாய் நாட்டிலிருப்பவர்களுடன் தொடர்புகொள்ள ஆகும் போன் செலவே உள்ளது.

நம் நாட்டிலிருந்து சர்வதேச போன் அழைப்புகளுக்கான கட்டணத்தைக் குறைக்கும் மத்திய அரசு வளைகுடா நாடுகளுக்கு ஒரு அளவீடும், அமெரிக்காவுக்கு இன்னொரு அளவீடும் வைத்திருப்பது வளைகுடா இந்தியர்களை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் அணுகுவதையே காட்டுகிறது. இரட்டைக்குடியுரிமைக் கொள்கையிலும் நமது மத்திய அரசு இரட்டை நிலைப்பாட்டில் உள்ளது. காங்கிரஸ் அரசாக இருந்தாலும் பா.ஜ.க அரசாக இருந்தாலும் இதே நிலைப்பாடே தொடர்கிறது.

இணையமும் தொழில்நுட்பமும் முன்னேறிய பிறகுதான் இந்தியர்களின் மண்டைச் சரக்கை அமெரிக்க ஐரோப்பிய தேசங்கள் உணர்ந்து கொண்டன. ஆனால் அதற்கு முன்பே நம்மவர்களை அரவணைத்து நம்நாட்டின் அந்நியச் செலவாணி இருப்பை அதிகரிக்க வளைகுடா நாடுகள் உதவியதை வெளிப்படியாகச் சொன்னால் சிலருக்கு பொத்துக் கொண்டு வரும். கோபம்!

இது ஒருபக்கமிருக்க, வெளிநாட்டு இந்தியர்களுக்கு நமது அரசுகள் வைத்திருக்கும் அளவீடு என்ன? ஏனிந்த பாரபட்சம்? விளக்குவார்களா? அமெரிக்க அடிவருடிகளும் ஆட்சியாளர்களும்!!!

Labels: , ,

Tuesday, June 05, 2007

தி.நகரில் தருமிக்கு என்ன வேலை?

தருமியின் சென்ற மாதப்பதிவில்"குண்டு எல்லாம் எதற்கு?" என்ற நாத்திகப் பதிவைக் காண நேர்ந்தது. உடனடியாக நாமும் கொஞ்சம் பகுத்தறிவைக் கொட்டி எதையாச்சும் பொதுநல நோக்கில் எழுதலாம் என்று ஆசைதான். ஆண்டு விடுமுறையில் ஊருக்குச் செல்லும் பரபரப்பில் இருந்ததாலும் தருமி தான் கடைசியாக வாங்கிய நோக்கியா போனை விட்டு இனி வேறெங்கும் செல்லப் போவதில்லை :-) என்ற நம்பிக்கையில் ஆறஅமர எழுதிக் கொள்வோமே என்று அப்பதிவுக்கான பின்னூட்டங்களை மட்டும் வாசித்து வந்தேன்.

பலரும் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார்கள்.மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்துவதை சட்டமீறலாகவும் அதை சகித்துக் கொள்ளும் மனநிலைக்கு மக்கள் வந்து வெகுகாலமாகி விட்டதென்றும் தங்கள் ஆற்றாமையைப் பகிர்ந்து கொண்டிருந்தார்கள். பாவம் சமய சகிப்பாளர்கள்! பரபரப்பான யுகத்தில் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதால் சிரமப்படும் முஸ்லிம் அல்லாதவர்களையும்,நாத்திகர்களையும் நினைத்தால் பரிதாபப் படவேண்டும்.

சர்.தியாகராயர் நகர் என்பதை தி.நகர் என்று சுருக்கிப் புரிந்துகொள்ளும் அவசர யுகத்திலும் உஸ்மான் சாலை,ஹபீபுல்லா சாலை என்று ஒருசில முஸ்லிம் பெயர் கொண்ட (தாலிபான்?!?) சாலைகளை இன்னும் அப்படியே விட்டு வைத்திருப்பதற்காக இந்து தேசபக்தர்களுக்கு கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும்!

தருமியின் பதிவைப் பற்றி சொல்ல வந்துவிட்டு எங்கோ சென்றுவிட்டேன். பொதுமக்களுக்கு இடைஞ்சல் என்ற நன்னோக்கில் எழுதப்பட்ட பதிவில், அதுவும் முஸ்லிம்கள் சாலையிலும் ஜும்ஆ தொழுவதால் ஏற்படும் இடைஞ்சல் பற்றி எழுதப்பட்ட பதிவில் பிரபல சமூக (?) ஆர்வலரும் இஸ்லாமிய விமர்சகருமான நேசகுமார் பின்னூட்டாமல் இருந்தால் அந்தத் தொகுதிக்காரர் என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தமில்லை. (எஸ்.கே முன்பு கற்பனையில்(!) சொல்லியிருந்தபடி நேசகுமார் நுங்கம்பாக்கம்வாசி! அனேகமாக இது தி.நகர் தொகுதியில்தான் வரும் என்று நினைக்கிறேன்). அவர் சொல்கிறார்:

"தருமி,நல்ல பதிவு. இப்படி நடுரோட்டில் தொழுகை செய்வது ஒரு விதமான மதவிளம்பரம். பர்தா போடுவது, மீசையை மழித்து தாடியை நீளமாக வைத்துக் கொள்வது - இது போன்ற ஒருவிதமான அட்வர்டைஸ்மன்ட்.

உடனடியாக இந்து மதம் பற்றி கேள்வி எழும் என்பதால் அதையும் சொல்லி விடுகிறேன். உச்சஸ்தானியில் லவுட் ஸ்பீக்கரில் அலறுவது குரானாக இருந்தாலும், எல்.ஆர்.ஈஸ்வரியாக இருந்தாலும் தவறுதான். விடியற் காலையில் கேட்கும் அபஸ்வரம் கோவிலிலிருந்து வந்தாலும், மசூதியிலிருந்து வந்தாலும் தவறே.

மற்ற மதத்துக்காரர்கள் அதே தவறைச் செய்யும்போதுதான் நமக்கும் புரிகிறது. என்ன செய்வது?

மும்பையில் இப்படித்தான் தெருவை மறித்து முஸ்லீம்கள் தொழுகை செய்வதைப் போல சிவசேனாக்காரர்கள் தெருவில் ட்ராஃபிக்கை நிறுத்தி ஆரத்தி செய்ய ஆரம்பித்தனர். உடனடியாக கலவரம் ஆரம்பித்தது
."

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது எப்படி என்று நேசகுமாரிடம்தான் கேட்க வேண்டும். முஸ்லிம்கள் ஐவேளை தொழ அழைக்கும் பாங்கொலியும் L.R.ஈஸ்வரியின் கற்பூர நாயகியே கனக வல்லியோ அல்லது குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் கும்மிப் பாட்டும் ஒன்றா?

முஸ்லிம்கள் லவுட் ஸ்பீக்கரில்தான் பள்ளிக்குத் தொழ அழைக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை என்பது வேறு விசயம். அப்படியே முஸ்லிம்கள் லவுட் ஸ்பீக்கரில் அழைக்காமல் இருந்து விட்டால் மட்டும் பொதுமக்கள்? செவிக்கு இடைஞ்சல் இல்லாமல் இருந்து விடுமா என்ன?

போக்குவரத்திற்கு இடையூறாக தொழுகை நடத்துதை வேண்டுமானால் குறையாகச் சொல்லலாம். (ஒரு சில நிமிடங்கள் அமைதியாக தியானம் செய்வதை இடையூறு என்று சொன்னால், நிரந்தரமாக சாலைகளை ஆக்கிரமித்திருக்கும் தெருக்கோவில்களையும் திடீர் பிள்ளையார்களையும் என்னவென்று சொல்வது?) முஸ்லிம்கள் முடிந்தவரை இத்தகைய தற்காலிக இடையூறுகளையும் தவிர்க்க வேண்டும். சம்பந்தப்பட்ட பகுதியுலுள்ள முஸ்லிம்கள் இவ்விசயத்தில் மாற்று மதத்தவரின் கருத்துக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்று சொல்வதில் நியாயமிருக்கிறது.

பர்தா,தாடி,மீசையெல்லாம் கூட நேசகுமார் போன்றவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறதாம்! ஒருவிதமான அட்வர்டைஸ்மெண்டாம்!! ஆகவே, முஸ்லிம் விளம்பரதாரர்களே இனிமேல் தயவு செய்து மீசையை வளர்த்தும், தாடியை ஷேவ் செய்தும், பெண்கள் பர்தா அணியாமலும் இருந்து நேசகுமார், தருமி போன்றவர்களுக்கு இடையூறு செய்யாதீர்கள்!

சமூக அக்கறையில் எழுதுவதாக நம்பச் சொல்லும் தருமி மாதிரியான என்றாவது குடிக்கும் பழக்கமுள்ள நாத்திகராக இருந்தாலும்கூட முஸ்லிம்களின் தொழுகைக்கான பாங்கொலி இவர்களின் பகுத்தறிவு செவிக்கு இடைஞ்சலாகக் கேட்கும்! அண்ணா மேம்பாலத்திலிருந்து சிம்ஸன் வரைக்கும் இருக்கும் ஆபாச சினிமாப் போஸ்டர்கள் மற்றும் அரைகுறை ஆடை விளம்பரங்களால் பொதுமக்களின் விழிகளுக்கு இடைஞ்சல் என்று யாராவது சொல்லிவிட்டால் அவ்வளவுதான்! நீங்கள் பெண்ணுரிமைக்கு எதிரான ஆணாதிக்க+மதஅடிப்படைவாதி என்று தனிமை படுத்தப்படும் அபாயம் உண்டு! எப்படித்தான் இத்தகைய நிரந்தர இடையூறுகள் பாழாய்போன பகுத்தறிவுக் கண்களுக்குப் படாமல் இருக்கின்றனவோ!

இத்தனை இடைஞ்சல்களையும் சகித்துக் கொண்டிருக்கும் திருவாளர் பொதுஜனம் யார்? அவர்கள் ஏன் முஸ்லிம்கள் வீதியில் தொழும்போதும், இந்துக்கள் மசூதிக்கருகில் தாரை தப்பட்டையுடன் வினாயகருக்கு சதுர்த்தி எடுக்கும் போதும்,அதிகாலையில் மணியடித்து சூலமங்கலம் சகோதரிகளின் பாடலைப்போட்டு பூசை செய்யும் போதும், கிறிஸ்தவர்கள் அமைதியாக திருஓலை ஏந்தி ஜெபப்பாடல்களைப் பாடிச்சென்றாலோ பொறுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன வந்தது ? என்று என்றைக்காவது யோசித்து இருக்கிறோமா?

மாட்டோம். ஏனென்றால் நாமெல்லாம் சமய சகிப்பாளர்கள் !

அப்படீன்னா தருமியும் நேசகுமாரும் யார் என்கிறீர்களா? யாருக்குத் தெரியும் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம் !

Labels: , ,

பார்வையாளர்கள்

    சுட்டிகள்

      சத்தியமார்க்கம்.காம்

eXTReMe Tracker