முஸ்லிம்லீக் மதவாதக் கட்சியா?

>> Tuesday, November 04, 2008

சமீபத்தில் ஊடகங்களில் தயங்கித் தயங்கி வினாக்குறியுடன் "மாலேகான் குண்டு வெடிப்புகளுக்கு இந்து அமைப்பு காரணம்?" என்று தலைப்பிட்ட செய்தியைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. அதன் தொடர்ச்சியாகக் கடந்த வருடமும் மாலேகான் மசூதியில் குண்டு வைத்தது "ஹிந்து" ஜாக்ரான் மஞ்ச்சின் இந்துத்துவா 'குண்டர்'கள் என்ற செய்தியைக் குறித்து இவ்வாரக் குமுதத்தில் ஞானி, "பயங்கரவாதத்தின் நிறம் காவி" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்.



மதரீதியில் மக்களைப் பிளவுபடுத்தி பாமரர்களிடம் மதவெறியூட்டி, அரசியல் இலாபம் கண்ட அமைப்புகளைப் பற்றி விளக்கமாகவே ஞானி எழுதி இருந்தார். அக்கட்டுரை அவரது நியாயமான உள்ளக் குமுறலாக இருப்பினும் "மதவெறி பயங்கரவாதம் பல வருடங்களாக இந்தியாவில் இருந்து வருகிறது. மேலை நாடுகளில் மதவெறி என்பது அரசியல் ஆட்சி நிர்வாக அமைப்பிலிருந்து பிரிக்கப்பட்ட பின்னர்தான் அங்கே இன்று காணப்படும் பொருளாதார, வாழ்வியல் மேம்பாடுகள் ஏற்பட்டன. இந்தியாவில் அரசியலுடன் மதத்தைப் பிணைப்பதையே கோட்பாடாகக் கொண்டு இயங்கிய ஹிந்து மகாசபாவின் தொடர்ச்சியாகவே ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி.முதல் முஸ்லிம் லீக், அல் உம்மா வரை பார்க்க வேண்டும்.

தமிழ்நாட்டில் இந்து முன்னணியும் பிள்ளையார் ஊர்வலங்களும் 90களில் வருவதற்கு முன்னால் அல்-உம்மா இல்லை. ஒரு மதத்தில் இயங்கும் மதவெறி அமைப்புதான் இன்னொரு மதத்தின் மதவெறி அமைப்பை போஷித்து வளர்க்கும் சத்துணவு." என்று மிகச் சரியாக ஞானி குறிப்பிட்டிருந்தார்.

ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பியுடன் அல்-உம்மாவைச் சேர்த்திருப்பதிலாவது ஓரளவு நியாயமுண்டு. இராம கோபாலனின் துவேஷப் பேச்சுக்களின் விளைவே பழனி பாபா போன்றவர்களைக் கொதிந்தெழச் செய்தது. இவர்களுடன் முஸ்லிம் லீக்கையும் சேர்த்து மதவாத அமைப்பாகச் எழுதியிருப்பது ஏனென்று புரியவில்லை! கட்சியின் பெயரில் "முஸ்லிம்" என்று இருப்பதால் அவ்வாறு எழுதியிருக்கக்கூடும்.எழுத்தாளர் ஞானி, முஸ்லிம் லீக்கின் நூற்றாண்டுச் செயல்பாடுகளை அறியாத "அஞ்ஞானி"அல்லர்; லீக்-வீக் ஆனதை அறியாமல் எழுதி இருப்பதற்கும் வாய்ப்பில்லை. 'அந்தப் பக்கம் ரெண்டு பேரு; இந்தப் பக்கம் ரெண்டு பேரு' என்ற ஜனநாயக-மதசார்பற்ற முத்திரையைத் தக்கவைக்க முஸ்லிம் லீக்கையும் இணைத்திருக்கக் கூடும்.

முஸ்லிம் லீக்கை பி.மு/பி.பி என்று இரண்டு கட்டங்களாகப் பிரிக்கலாம். அதாவது பிரிவினைக்கு முன், பிரிவினைக்குப்பின் என்று வகைப்படுத்தலாம். பி.மு.வில் இந்தியா சுதந்திரம் பெறுவதையே குறிக்கோளாகக் கொண்டு முஸ்லிம் லீக் செயல்பட்டது. இந்திய தேசியக் காங்கிரஸுடன் இணைந்து, முஸ்லிம்களை ஒருங்கிணைத்து சுதந்திரத்திற்காகப் போராடத் தூண்டியது. பிரிவினைக்கு முந்தைய முஸ்லிம் லீக்கின் சுதந்திரப் போராட்டப் பங்களிப்பு மகத்தானது என்பதை யாரும் மறுக்க முடியாது.

சுதந்திரம் பெறுவதற்குச் சிலவருடங்களுக்கு முன்பே, முஸ்லிம்களுக்கெனத் தனிநாடு கோஷம் அவர்கள் மீது திணிக்கப் பட்டு, பிரிவினைவரை தள்ளப்பட்டது. இந்திய தேசியக் காங்கிரஸில் உயர்மட்டத் தலைவர்களாக இருந்த சிலரோடு ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியும் தேசப் பிரிவினைக்கு முக்கியக் காரணங்களாக இருந்தன.

பிரிவினைக்குப் பின்னர் தேசப்பற்றுடன்,பிறந்த மண்ணிலேயே தங்கிவிட்ட முஸ்லிம்களுள் குறிப்பிட்ட சிலரே முஸ்லிம் லீக்கைத் தொடந்து நடத்தி வந்தார்கள். காயிதே மில்லத் என்றறியப்பட்ட முஹம்மது இஸ்மாயில் ஸாஹிப் அவர்களுக்குப் பிறகு சுலைமான்சேட், பனாத்வாலா, அப்துல்ஸமது,அப்துல்லத்தீப் ஆகிய நாவன்மையும் திறமையும் கொண்ட தலைவர்கள் பொறுப்பேற்று அமைப்பைக் கொண்டு சென்றபோதும் தனக்கான தனித்தன்மையை நிலைநிறுத்தத் தவறியதால் முஸ்லிம் லீக் என்ற பேரியக்கம் தேய்ந்து, பெயரளவில் தட்டுத் தடுமாறி பெயரளவில் இயங்கி வந்தது. தற்போது பேராசிரியர்.காதிர் முஹைதீன் மாநிலத்தலைவராக இருக்கிறார். அவருக்கு அடுத்ததாக முஸ்லிம்லீக்கைத் தமிழகத்தில் தலைமையேற்று நடத்தப் பொருத்தமான எவரும் இருப்பதாகத் தெரியவில்லை.

யூனானி மருத்துவர் சையத் சத்தார், வடக்குக் கோட்டையார் என்று யார் யாரெல்லாமோ முஸ்லிம்லீக்கின் பிரதிநிதிகளாக அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் பொதுமேடைகளிலும் தோன்றுகிறார்கள். திமுக தலைவர் கருணாநிதி பலதடவை முஸ்லிம் லீக்கிற்கு இதயத்தில் மட்டுமே இடம் கொடுத்தும், சிலநேரம் இதயக்கதவை திறந்து காட்டியபிறகும் திமுகவின் சிறுபான்மைப் பிரிவாக இருப்பதையே இதன் தலைவர்கள் விரும்புகிறார்கள்!

ஜெயலலிதா அணியிலிருக்கும்போது அவர் பாஜகவுடன் கூட்டுசேர்ந்தால் "நாங்கள் அதிமுகவுடன் மட்டுமே கூட்டு" என்று விவரமாகத் தெளிவு படுத்துகிறார்கள். தமிழகத்தில் இருக்கும் ஜாதிக் கட்சிகள் அளவுக்குக்கூட முஸ்லிம்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தாததற்கு அதன் தலைவர்களாகச் செயல்பட்டவர்களே காரணம்.

கடந்த 20-30 ஆண்டுகளில் முஸ்லிம் லீக்கைப் பொருத்தவரை மத்தியில் காங்கிரஸுடனும் மாநிலங்களில் தனித்து அல்லது ஏதேனும் ஒரு திராவிட கட்சியுடன் கூட்டனியாகத் தேர்தலில் போட்டியிடுகிறது. சுதந்திரத்திற்குப் பிந்தைய முஸ்லிம் லீக், முஸ்லிம்களுக்காகச் சொல்லிக் கொள்ளும்படியாக எதுவுமே செய்யவில்லை என்பதுதான் அதன் தேய்வுக்குச் சரியான காரணம் என்று சொல்லலாம்.அனேகமாக கட்சியின் பெயருடன் மத அடையாளத்தை வைத்துக் கொண்டு அம்மதத்தைச் சார்ந்தவர்களுக்காக எதுவுமே செய்யாத ஒரே மதசார்புடையக் கட்சி முஸ்லிம் லீக் மட்டுமே!

ஆண்டுக்கு ஒருமுறை மீலாது விழா மற்றும் இஃப்தார் விருந்தில் மட்டுமே முஸ்லிம்லீக் என்று ஒரு கட்சி இருப்பதை மீள்நினைவு செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. தேர்தல் பிரச்சாத்தின்போது கூட்டணித் தலைவரின் பேச்சைக் கேட்க முஸ்லிம்கள் கூடினார்கள் என்பதைக் காட்ட பச்சைப் பிறைக்கொடி தென்படும். சென்னை அங்கப்பன் தெருவிலிருந்து திருவல்லிக்கேணிவரை மக்களை ஊர்வலமாக வரச்செய்து சீரணி அரங்கிலும் எழும்பூர் இம்பாலாவிலும் கலைஞர் அல்லது வீரமணியை வைத்து நபிகள் நாயகத்தையும் காயிதே மில்லத்தையும் புகழ்ந்து ஒருசில வார்த்தைகள் பேசவைத்ததே தமிழக முஸ்லிம்லீகின் நீண்டகாலச் சாதனையாக இருந்து வருகிறது!

பாபர் மசூதி இடிப்பைக் கண்டிக்கும் வருடாந்திர சடங்குகளில்கூட முஸ்லிம் லீக் எழுச்சியுடன் கலந்து கொண்டதாக அறியமுடியவில்லை. கட்சிப் பெயரில் "முஸ்லிம்" என்பது பெயரளவில் மட்டுமே இருக்கிறதே தவிர கிட்டத்தட்ட இதன் தலைவர்கள் உண்மையான முஸ்லிம்களாக நடந்து மற்றவர்களுக்கு வழிகாட்டவுமில்லை.மீலாது விழா என்ற இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை ஆண்டுதோறும் நடத்தி வருவதிலிருந்து முஸ்லிம் லீக்கின் இஸ்லாம் குறித்த புரிந்துகொள்ளலை அறியலாம்.

இந்துத்துவா அமைப்புகளைப் போல் இந்துக்களுக்கு எதிராக முஸ்லிம்களை உசுப்பிவிட்டு இலாபம் அடைந்து கொள்ளும் குறைந்தபட்ச அரசியல் தகுதி(!)கூட லீக்குக்கு இருந்ததாக வரலாறு இல்லை. இதுவரை முஸ்லிம் லீக்கைச் சார்ந்த ஒருவர்கூட குண்டுவெடிப்புகளில் தொடர்பு படுத்தப்படாமல் இருப்பதிலிருந்து அதிகார வர்க்கம் முஸ்லிம் லீக்கின் செயல்பாடுகளை நன்கு அறிந்திருப்பது தெளிவாகிறது. முஸ்லிம் லீக்கின் கொடியும் பாகிஸ்தான் தேசியக்கொடியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தும்கூட எதற்கெடுத்தாலும் தன் பிறந்த மண்ணான பாகிஸ்தானுடன் இந்திய முஸ்லிம்களை இணைத்துப் பேசும் அத்வானிகூட முஸ்லிம் லீக்கைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.

பெயரளவில் மட்டுமே முஸ்லிம்களுக்கான அரசியல்கட்சி என்று சொல்லி, முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் அரசியலுக்காக அடகுவைத்து வெறும் ஓட்டு வங்கியாக மட்டுமே முஸ்லிம் லீக் மாறிப் போனதை உணர்ந்த சிலர் 1990களில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பில் இணைந்து செயல்பட்டனர். தற்போது தவ்ஹீது ஜமாத் என்று பிரிந்து நீண்டகாலத்திற்குப் பிறகு அரசியல்ரீதியில் ஒருங்கிணைந்து வந்த முஸ்லிம்களை அற்ப காலத்துக்குள் மீண்டும் மார்க்கம், அரசியல் என்று கூறுபோட்டுள்ளனர் என்பது தனிக்கதை!

பிரிவினையின்போதே பாகிஸ்தானுடன் முஸ்லிம் லீக் முழுமையாகப் போயிருந்தாலாவது இந்திய முஸ்லிம்கள் ஓரளவு அரசியல் விழிப்புணர்வு அடைந்திருப்பர். நியாயமாகச் சொல்வதென்றால் முஸ்லிம்களைப் பின்னுக்குத் தள்ளியதில் முஸ்லிம் லீக், மற்ற கட்சிகளுக்கு சற்றும் குறைந்ததல்ல. தேசியளவிலும் மாநிலளவிலும் முஸ்லிம்களுக்குப் பயனற்று முஸ்லிம்களை ஓரணியில் திரட்டத்தவறிய முஸ்லிம் லீக்கை ஆர்.எஸ்.எஸ் சங்பரிவாரங்களைப் போன்ற மதவாதக் கட்சியாக ஞானி உவமித்திருப்பது சரியல்ல.

ஆங்கிலத்தில் LEAGUE என்றால் An association of states or organizations or individuals for common action அதாவது தனிநபர்கள், அமைப்புகள், மாநிலங்கள் இணைந்து ஒரு பொதுநோக்கத்தை அடைவதற்கான அமைப்பு என்று பொருள் விரியும். தேசப்பிரிவினைக்குப் பின்னர், இந்திய முஸ்லிம் லீக் அப்படி ஏதாவது ஓர் பொதுநோக்கத்தை அடைந்ததா எனத் தெரியவில்லை. முஸ்லிம் லீக் (LEAGUE) என்பதைவிட முஸ்லிம் வீக் (WEAK) என்பதே சரியாக இருக்கும்!

பெரும்பாலான முஸ்லிம்களே,முஸ்லிம் லீக்கை மறந்து விட்டனர். ஞானிக்கு நினைப்பில் இருப்பது வியப்புக்குரிய ஒன்றுதான்!

முஸ்லிம் லீக்! ஜிந்தாபாத் :-(

4 comments:

abdul 11/04/2008 5:57 PM  

muslim league is one and one of the islamic political party,alhamdulillah till going with imaan,insha allah this party will stand untill end of the world.

A.Abdul Jabbar 11/06/2008 7:14 AM  

//மீலாது விழா இஸ்லாத்தில் இல்லாத ஒன்று// என்று சொல்லும் தாங்கள் //பாபர் மசூதி இடிப்பைக் கண்டிக்கும் வருடாந்திர சடங்கு// ஏதோ இஸ்லாத்தில் உள்ள ஒரு சடங்கு போலவும் //அதில் கூட முஸ்லிம் லீகினர் எழுச்சியுடன் கலந்து கொண்டதாக அறிய முடிய வில்லை// என்று எழுதி இருப்பது
ஒரு வேளை இந்த வருடாந்திர சடங்கு மட்டும் இஸ்லாத்தில் உள்ள ஒன்று போல தெரிகின்றதே?
உண்மையான் முஸ்லிம்களாக நடந்து மற்றவர்களுக்கு வழி காட்டவில்லை என்றால் ஒரு முஸ்லிம் முஸ்லிமாக நடக்கின்றானா என்பதை அல்லாஹ் அறிவானா அல்லது எதிரொலி தான் சான்றளிக்க வேண்டுமா?

நல்லடியார் 11/06/2008 10:20 AM  

//மீலாது விழா இஸ்லாத்தில் இல்லாத ஒன்று// என்று சொல்லும் தாங்கள் //பாபர் மசூதி இடிப்பைக் கண்டிக்கும் வருடாந்திர சடங்கு// ஏதோ இஸ்லாத்தில் உள்ள ஒரு சடங்கு போலவும் //அதில் கூட முஸ்லிம் லீகினர் எழுச்சியுடன் கலந்து கொண்டதாக அறிய முடிய வில்லை// என்று எழுதி இருப்பது ஒருவேளை இந்த வருடாந்திர சடங்கு மட்டும் இஸ்லாத்தில் உள்ள ஒன்று போல தெரிகின்றதே?

கடந்த 17 ஆண்டுகளாக நடந்து வரும் பாபர் மசூதி மீட்புப் போராட்டங்களை ஒருசில இயக்கங்கள் ஏதோ வருடாந்திர சடங்குபோல் மாற்றிவிட்டார்கள்.
ஆண்டுதோறும் மீலாது விழா என்ற பெயரில் மார்க்கத்தில் இல்லாத விழா நடத்துவதில் காட்டும் ஆர்வத்தை, பாபர் மசூதி மீட்புப் போராட்டங்களை அகில இந்திய அளவில் காட்டியிருந்தால் போராட்டத்தின் வீரியம் அதிகார வர்க்கத்தின் கவனத்தை ஈர்த்திருக்கும்.

இந்திய முஸ்லிம்களின் அரசியல் பேரியக்கம் என்று சொல்லிக்கொள்ளும் லீக், தேசிய அரசியல் பிரச்சினை ஆகிவிட்ட பாபர் மசூதி மீட்பில் கூடுதல் ஆர்வம் காட்டியிருக்கலாம் என்று சொல்ல வந்ததைப் புரிந்து கொள்ளவும்.

//உண்மையான் முஸ்லிம்களாக நடந்து மற்றவர்களுக்குவழிகாட்டவில்லை என்றால் ஒரு முஸ்லிம் முஸ்லிமாக நடக்கின்றானா என்பதை அல்லாஹ் அறிவானா அல்லது எதிரொலி தான் சான்றளிக்க வேண்டுமா? //

இங்கு தனிமனிதரின் ஈமானைப் பற்றிப் பேசவில்லை. முஸ்லிம்களுக்கான அகில இந்திய அரசியல் அமைப்பாகச் சொல்லிக் கொள்ளும் ஒரு அமைப்பு இஸ்லாத்தின் அடிப்படைகளை 100% சரிவரப் பேண வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறல்லவே சகோதரரே!

GALEEL BHASHA 12/11/2008 5:04 PM  

//கட்சியின் பெயருடன் மத அடையாளத்தை வைத்துக் கொண்டு அம்மதத்தைச் சார்ந்தவர்களுக்காக எதுவுமே செய்யாத ஒரே மதசார்புடையக் கட்சி முஸ்லிம் லீக் மட்டுமே!//
-- well said matey..

Post a Comment

About This Blog

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP