துப்பட்டாவுக்கு வெளியேதான் பெண்ணியமா?
இந்நிகழ்ச்சியில் அவர் உடை காரணமாக அவமானப்படுத்தப்பட்டதால், "துப்பட்டாவில் தான் இருக்கிறதா தமிழ்க்கலாசாரம்" என்ற தொனியில் தினமணியில் அவர் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.
அவர் எழுத்துப்படி, "காலை பத்து மணியளவில் கல்லூரி வாசலை அடைந்த என்னை நிறுத்திய கல்லூரியின் காவலர்கள், அடையாள அட்டையைக் காட்டச் சொன்னார்கள். நான் அழைப்பிதழைக் காட்டினேன். "உங்களை உள்ளே அனுமதிக்க முடியாது.ஏனென்றால் நீங்கள் ஜீன்ஸ்-குர்தா அணிந்து இருக்கிறீர்கள்; துப்பட்டா அணியவில்லை' என்றார்கள். ஒரு நிமிடம் எனக்குத் தலைசுற்றியது;நான் தமிழ்நாட்டில்தான் இருக்கிறேனா அல்லது தாலிபான்களின் ஆப்கானிஸ்தானில் இருக்கிறேனா என்ற இடக்குழப்பம் ஏற்பட்டது.
கிணுகிணுத்த கைபேசியைத் தட்டினால் அமைப்பாளர்கள்,"சிறிது நேரம் பொறுங்கள், நாங்கள் வந்துபேசி அழைத்துச் செல்கிறோம்' என்றார்கள். நிமிடங்களில் ஒரு மாணவி ஓடிவந்து கறுப்புத் துப்பட்டாவைத் தந்து "இதை அணிந்துகொண்டு உள்ளே வாருங்கள்' எனக் கெஞ்சும் தொனியில் கேட்ட போது எனக்குச் சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை.
"சுதந்திரமாக ஆடையணிந்துகூட வரமுடியாத இடத்தில், சுதந்திரமான சினிமாவை நேசித்துப் பணியாற்றிக் கொண்டிருக்கும் எனக்கு எந்தப் பணியும் இல்லை'' என்று மட்டும் குறிப்பிட்டுவிட்டுத் திரும்பிவிட்டேன்.
கல்வி நிலையங்கள் தமிழ்க் கலாச்சாரத்தைத் துப்பட்டாவில் கட்டிக்காக்கும் அளவுக்குத் தரம் தாழ்ந்துவிட்டனவா என்று கடுங்கோபம் வந்தது..............."
இந்தக்கட்டுரையை வைத்து, தமிழிணையக் குழுமங்களில்"துப்பட்டாவில் படபடக்கும் தமிழ்க் கலாசாரம்" என்றெல்லாம் காரசார விவாதம். இதையே காரணமாக வைத்து ஆணாதிக்கம், பெண்ணுரிமை என்று முற்போக்கு வியாபாரிகளின் கடைவிரிப்பு. நல்ல வியாபாரம்.
இதென்ன கூத்து?
கல்லூரியாகட்டும், பிற நிறுவனங்களாகட்டும், அதற்கென்று விதிகள் உள்ளன. அவ்விதிகளை மதிப்பதாக இருந்தால், செல்ல வேண்டும். இல்லா விட்டால், செல்ல வேண்டியதில்லை, அவ்வளவு தான்;ஏன் இந்தப் பிடிவாதத்தை ஆணியம்-பெண்ணியம் என்று கயிறுதிரிக்க வேண்டும்?
சென்னையில் மார்கழி-டிசம்பர் சபாக்களில் நடக்கும் அரங்கேற்றங்களில் டூபீஸுடன்தான் பரத நாட்டியமாடுவேன்-இதுவும் பெண்ணுரிமை என்று எவரும் உரிமை கோருவதில்லை. ஏனென்றால் பரத நாட்டியம் மடிசார் மாமிகள் ஆடும் தெய்வீக நாட்டியம் என்பதை ஏற்று அதற்கேற்ற ஆடைக் கோட்பாட்டுடன் வரவேண்டும் என்பது புரிந்து ஆடுபவரின் கொள்ளல்.
பெண்களுக்கு என்றில்லாமல், ஆண்களுக்கும் இந்த ஆடைக் கட்டுப்பாடு உண்டுதானே. ஆணோ-பெண்ணோ நீதிமன்றங்களில் கருப்பு அங்கி அணியாமல் யாரும் வாதாட முடியாது! நீதிபதியே ஆனாலும் கருப்பு அங்கி அவசியம்! அங்கெல்லாம் யாரும் ஆடைக்குறைப்பு பற்றியோ பெண்ணுரிமை பற்றியோ வாய்திறப்பதில்லை!
ஒரு ஆண் மாணவன், தான் விரும்பிய வண்ணம் லுங்கி/வேட்டி அணிந்துக் கொண்டு இது என் சுதந்திரம் என்று சொன்னால் மட்டும் கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கிறதா என்ன? அல்லது அந்த மாணவன் தான் ஆணுரிமைக் கோரி போராடுகிறானா?
ஒரு அரங்கினுள்ளோ, விமானத்தினுள்ளோ சிலவகை ஆடை அணிந்து கொண்டு வரக்கூடாது என்று தடை விதிக்கப்படுகிறது என்றால், யாரும் அங்கே போய் அய்யோ என் ஆணியம் போச்சே, பெண்ணியம் போச்சே என்றோ, அநியாயம் ஆச்சே என்றோ கூக்குரலிடுவதில்லை.இடம் பொருள் பார்த்துநடந்து கொள்கின்றனர்.
லீனா மேட்டரில், பெண்ணியம் காக்கப் புறப்பட்டு வந்தவர்களின் வாதங்கள் தான் வேடிக்கை.காந்தி மேலாடை அணியாமல் இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கு வந்த போது, விதிகளைத் தளர்த்தி அனுமதித்தார்களாம், அதனால் லீனாவையும் அனுமதித்து இருக்க வேண்டுமாம். ஒப்பீட்டுக்கும் ஒரு அளவில்லையா?
காந்தி மேற்சட்டை அணியாத காரணமும், லீனா துப்பட்டா அணியாததும் ஒன்றா? காந்திஜியின் உயர்ந்த நோக்கமெங்கே? சிறு வாய்ப்பு கிடைத்தாலும் பெண்ணியம் பேசி புகழ்க்குளிக்க விரும்புகிற லீனாக்கள் எங்கே?
லீனாக்கள் விளங்கிக்கொள்ள வேண்டியதெல்லாம்,பேனை பெருமாளாக்கினாலும், சின்ன விஷயங்களை விளங்கிக்கொள்ளாமல், பெண்ணுரிமை பேசி குழப்பக்கூடாது என்பதைத்தான்!
Labels: பெண்ணியம்
